×

தமிழக கோயில்களில் விஐபி தரிசனத்தை குறைப்போம்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: தமிழக கோயில்களில் விஐபி தரிசனத்தை படிப்படியாக குறைக்கும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் சீராய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டி: இதுவரை 3,057 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, 3,739 கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான சொத்துக்களை அறநிலையத்துறை மீட்டெடுத்துள்ளது. நிலுவையில் இருந்த வாடகை தொகை 254 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. நடப்பாண்டில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில்களை புனரமைப்பதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் தொடங்குவது குறித்து  சீராய்வு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அந்த நிகழ்ச்சிக்கு முறையான அழைப்பு எங்களுக்கு வந்தால் அதற்கு எங்கள் துறையும் அரசும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.  காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசிலிருந்து அறநிலையத்துறைக்கு எந்த தகவலும், கடிதமும் வரவில்லை. விஐபி தரிசனத்தை படிப்படியாக குறைக்கும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 20 ரூபாய் கட்டண தரிசனத்தின் மூலம் ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்றாலும், அந்த  கட்டண தரிசனம் தேவையில்லை என்று முடிவெடுத்து, அந்த வருமானத்தை திருக்கோயிலின் இதர வருமானத்தில் ஈடுசெய்து கொள்ளலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Shekhar Babu , We will reduce VIP darshan in Tamil Nadu temples: Minister Shekhar Babu informs
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்...