×

தமிழகத்தில் விதிமுறைகள்படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடக்கும்: ராமதாசுக்கு அமைச்சர் பதில்

சென்னை: விதிமுறைகளின் படி தமிழக மருத்துவக் கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலை, போர்வைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி கருகலைப்புக்கான மருந்தினை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ கவுன்சிலில் வாக்களிப்பு மூலம் பதிவாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். 1.5 லட்சம் மருத்துவர்கள் வாக்களிக்க தகுதியான மருத்துவர்களாக உள்ளனர். மாவட்ட கவுன்சிலில் 10 பேர் இருக்க வேண்டும். அவர்களில், அரசு தேர்ந்தெடுக்கும் 7 பேர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின் தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதில் பதிவாளர் பதவி குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது.

விதிமுறைகளின் படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்தவ கல்லூரி  மற்றும் ஒரு தமிழ் வழி மருத்துவ கல்லூரி என 7 மருத்துவ கல்லூரி வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதிய மருத்துவ கல்லூரி குறித்து நேரில் சென்று கோரிக்கை விடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Medical Council elections ,Rama Das , Tamil Nadu Medical Council elections will be held as per rules: Minister's reply to Rama Das
× RELATED பாமக, தேமுதிக, தமாகாவுடன் அதிமுக...