×

வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கல்லூரி உதவி பேராசிரியர் நியமனங்கள் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கறம்பையைச் சேர்ந்த முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்எஸ்சி, எம்பில், பிஎச்டி முடித்துள்ளேன். அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஆர்பி சார்பில் வெளியானது. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என கூறப்பட்டிருந்தது. நான் விண்ணப்பித்தேன். ஆனால், நியமன நடைமுறைகள் தொடரவில்லை. தற்போது உயர்கல்வித்துறை முதன்மை ெசயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், கடந்த 2019ல் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், தேர்வின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடத்துடன், கூடுதலாக சேர்க்கப்பட்டதும் சேர்த்து 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது. 40 முதல் 50 வயது வரையுள்ள பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறோம்.

ஆனால், எங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இத்தோடு தேர்வு மூலம் தேர்வு செய்வது எங்களை பாதிக்கும். எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். 2019 அறிவிப்பின்படி சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசுத் தரப்பில் பதிலளிக்கவும், இந்த விவகாரம் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தே அமையும் எனக் கூறி விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.

Tags : Assistant Professor of College , Appointing Assistant Professor of the College regarding the final order of the case: ICourt Branch Order
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...