காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு கே.எஸ்.அழகிரியையும் விசாரிக்க வேண்டும்: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம்

நெல்லை: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும் விசாரிக்க வேண்டுமென்று ரூபி மனோகரன் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்களால் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில், நெல்லை மாவட்ட காங்கிரஸாரை சென்னைக்கு அழைத்து வந்தது மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தான் என்று குற்றம்சாட்டிய கே.எஸ்.அழகிரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன், ரூபி மனோகரன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றினார்.

அதேபோல், சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்களை கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஓடஓட விரட்டித் தாக்கி காயப்படுத்தியதாக, கே.எஸ்.அழகிரி மீதும் குற்றம்சாட்டியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், அவரை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வருகிற 24ம் தேதி, காலை 10.30 மணிக்கு, காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அந்த விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்க, தனக்கு கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து  கே.ஆர்.ராமசாமிக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தவிர்க்க முடியாத சில காரணங்களாலும், என்னுடைய நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதாலும், மனதளவில் எனக்கு ஏற்பட்ட காயம் இன்னமும் ஆறவில்லை என்பதாலும், நான் நேரில் வந்து விளக்கம் தர, 2 வாரம் கழித்து மாற்று தேதி வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். மேலும், என்னை விசாரிப்பது போன்று, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, செங்கம் குமார், கே.வி.ரஞ்சித் (கே.வி.ஆர்.) மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் இந்த விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இதன்மூலம் தங்களை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ரூபி மனோகரன்  கூறியுள்ளார்.

Related Stories: