×

அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு மேகாலயா எல்லையில் 6 பேர் பலி

கவுகாத்தி: மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கு இடையே மீண்டும் எல்லை பிரச்னை வெடித்தது. இருமாநில எல்லையில் அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாம் - மேகாலயா மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், சர்ச்சைக்குரிய எல்லை பகுதிகளில் அடிக்கடி இருமாநில போலீசார், மக்களுக்கு இடையே மோதல்கள் நடக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எடுத்த நடவடிக்கையால், இருமாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையல், இரு மாநில எல்லையான மேகாலயா மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கூறுகையில், ‘மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள முக்ரோ கிராமத்தில் ஒரு லாரியில் மரத்தை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது, அசாம் வனத்துறையினரும், போலீசாரும் அந்த லாரியை சிறைபிடித்தனர்.  இதையறிந்த, அப்பகுதிகளை சேர்ந்த மேகாலயா மக்கள் அங்கு குவிந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவை சேர்ந்த பொதுமக்கள் 5 பேரும், அசாம் வனத்துறையை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.

அசாம் போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டை கடுமையாக கண்டிக்கிறேன்’ என்று கூறினார். இந்த மோதல் காரணமாக, இருமாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இருமாநில மக்களுக்கு இடையே மோதல் நடப்பதை தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, இரு மாநில அரசுகளிடமும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால் இருமாநிலத்தின் 7 மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கவுகாத்தி எல்லையை மேகாலயா போலீசார் மூடி உள்ளதால், வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் காத்து கிடக்கின்றனர்.

Tags : Assam ,Meghalaya border , 6 killed in Assam police firing on Meghalaya border
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...