மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: ‘மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் கூட்டம் டெல்லியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் கஜேந்திரசிங் ஷெகாவத், காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் இந்த அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை விதித்தது. இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் மனுவை, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் உமாபதி, குமணன் நேற்று தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மேகதாது அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இது பற்றி எந்த ஆலோசனையும், விவாதமும் நடத்த முடியாது. அதற்கான அதிகாரமும் அதற்கு கிடையாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி நீர் பங்கீடு பிரச்னையின்றி நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கவும், அப்படி ஏதேனும் பிரச்னை  ஏற்பட்டால் அதை சரி செய்வது மட்டுமே அதன் பணியாகும். அதை விடுத்து, புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது போன்றவை பற்றி ஆய்வு செய்யக் கூடாது.

மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தும் கர்நாடகாவின் முயற்சி, உச்ச நீதிமன்றத்தைின் தீர்ப்பை மீறிய செயலாகும். மேலும், காவிரியின் உபரி நீரை தடுக்கவோ, மடை மாற்றம் செய்யவோ கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை என்பதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த உபரி நீரை தேக்குவதற்காக, 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடகா முற்சிப்பது இத்தீர்ப்புக்கு எதிரானது. கபினி அணை துணைப் படுகையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து காவிரியில் வரும் நீர், கிருஷ்ணராஜ சாகரின் கீழுள்ள காவிரி ஆற்றின் பிரதான ஓடையின் நீர்ப்பிடிப்பு, சிம்ஷா, அர்காவதி மற்றும் சுவேர்ணவதி துணைப் படுகைகள், பல்வேறு சிறிய நீரோடைகளில் வரும் நீர், கபினி அணையில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்வரத்து, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேறும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்வரத்து ஆகியவை,  தமிழக நீர்வரத்துக்கான முக்கிய காரணம்.

இந்த தண்ணீரை தேக்க மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு இந்த நீர்வரத்து அனைத்தும் முற்றிலும் பாதிக்கும். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க மட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து விட்டு, தற்போது அதை மீறி மேகதாது விவகாரத்தை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கருப்பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். அதனால், ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதம் செய்யவோ, அதனை கருப்பொருளாக சேர்க்கவோ கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: