பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் உள்பட 4 ஆசிரியர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே திருப்பூணித்துறையில் தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி உள்ளது. சில தினங்களுக்கு முன், இந்த பள்ளியில்  படிக்கும் பிளஸ் 1 மாணவியை  கிரண் (51) என்ற ஆசிரியர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்பதற்காக தனது பைக்கில் அழைத்து சென்றார். கலைவிழா முடிந்து இரவில் பைக்கில் திரும்பினர்.  அப்போது மாணவியிடம் ஆசிரியர் கிரண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். மறுநாள் மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சம்பவத்தை கூறி உள்ளார். இந்த விவரம் பள்ளியின் முதல்வர் சிவகலாவுக்கும் தெரிய வந்தது. ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து திருப்பூணித்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கிரணை கைது  செய்தனர். இது தவிர மாணவி மீதான பாலியல் வன்முறையை மூடி மறைத்த பள்ளி முதல்வர் சிவகலா, ஆசிரியர் ஜோசப், ஆசிரியை சைலஜா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: