×

‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: ‘ரோஜ்கார் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்னையாக முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.  தற்போது, நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய ஆயுதமாக வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்ப அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் 10 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், ‘ரோஜ் கார் மேளா’ மூலம் 2ம் கட்டமாக நேற்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குஜராத் மற்றும் இமாச்சலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்த இரு மாநிலங்களை தவிர, நாட்டின் 45  இடங்களில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 71,056 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இது இரட்டை இயந்திர அரசின் இரட்டை நன்மையாகும். இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடரும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யூனியன் பிரதேசங்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் ‘ரோஜ்கார் மேளா’முகாம் நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. கோவா மற்றும் திரிபுராவில் 24 மற்றும் 28ம் தேதி ‘ரோஜ்கார் மேளா’ நடைபெற உள்ளது. இளைஞர்கள் இந்த நாட்டின் பலமாகும். அவர்களின் திறமையானது நாட்டை தட்டியெழுப்புவதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

* மோடி ஆட்சியில் வராக்கடன் தொகை ரூ.2.4 லட்சம் கோடி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் சுப்ரியா ஷ்ரினட்டே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ``வங்கிகளை சுரண்டி நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி சென்ற 38 வங்கி கடன் மோசடி குற்றவாளிகளை இந்தியா கொண்டு வருவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. வராக்கடன்கள் அல்லது வங்கி கடன் தள்ளுபடி குறித்தோ எழுப்பப்படும் கேள்விகளுக்கு பாஜ.வினர் பதில் அளிப்பதே கிடையாது. பாஜ அரசு தள்ளுபடி செய்த வங்கி கடனைக் கொண்டு நாட்டின் 61 சதவீத நிதி பற்றாக்குறையை சரி செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி கடனை பாஜ தள்ளுபடி செய்துள்ளது. தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், வங்கி திவால் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட 542 வழக்குகளில் முறையே ரூ.8 மற்றும் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. 13% கடன் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வராக்கடன் ரூ.5,000 லட்சம் கோடி இருந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் ரூ.2.4 லட்சம் கோடியாக (365%) அதிகரித்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.

* தேர்தல் ஸ்டன்ட்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று (நேற்று) பிரதமர் மோடி வாக்காளர்களை தவறாக வழிநடத்த 71,000 வேலை பணி நியமன் ஆணைகளை வழங்கி உள்ளார். 30 லட்சம் பதவிகள் காலியாக இருக்கும் அரசாங்கத்தில், இது மிகவும் குறைவு. ஆண்டுக்கு 2 கோடி வேலை தருவதாக வாக்குறுதி! எட்டு ஆண்டுகளில் பதினாறு கோடி வேலைகள் தருவதாக இருந்தது. ஆனால் ‘தேர்தல் ஸ்டன்ட்’ ஆயிரக்கணக்கில்தான்!’ என்று தெரிவித்து உள்ளார்.

Tags : Modi , 71,000 jobs in phase 2 of Rojkar Mela scheme: PM Modi
× RELATED சொல்லிட்டாங்க…