தெலங்கானா அமைச்சரின் வீடு உள்பட 50 இடங்களில் ரெய்டு: வருமானவரித்துறை அதிரடி; முதல்வர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி

திருமலை: தெலங்கானாவில் அமைச்சரின் வீடு, அலுவலகம் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், ரூ.2 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. பிரதமர் மோடியுடன் இம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேரடியாக மோதி வரும் சூழல், அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்படுவதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் பாஜ.வுக்கும் இக்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகமாகி வருகிறது.

டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏ.க்களை தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசி, தனது கட்சிக்குள் வளைத்து போட பாஜ முயன்றது. இந்த பேரத்தில் ஈடுபட்ட பாஜ ஆதரவாளர்கள் 4 பேரை தெலங்கானா போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக, முதல்வர் சந்திர சேகர ராவுக்கும் பாஜ தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடந்தது. முனுகோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் இந்த மோதல் மேலும் தீவிரமானது. அதோடு, சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் இணைய உள்ளதாக பாஜ எம்பி தர்மபுரி அரவிந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த டிஆர்எஸ் தொண்டர்கள் தர்மபுரி அரவிந்த் எம்பி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இது போன்ற விவகாரங்களால், பிரதமர் மோடியுடன் சந்திரசேகர ராவ் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆளுநர் தமிழிசையுடனும் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாரெட்டி. இவர் தற்போது ரங்காரெட்டி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பல்கலைக் கழகம், கல்லூரிகள் நடத்தி வருவதோடு, ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் இவரது வீடு, மருத்துவ பல்கலைக் கழகம், இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என 14 கல்லூரிகள், அவருடைய இளைய சகோதரர்கள், மகன் ராஜசேகர், மருமகன் ராஜசேகர ரெட்டி, பேரன் மற்றும் இவர்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இதில், 50 குழுக்கள் ஈடுபட்டன. இந்த சோதனை நேற்றிரவு வரை நீடித்தது. சோதனை நடத்தப்பட்ட பல இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தெலங்கானாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தனது அமைச்சர்கள் வருமான வரித்துறையால் அடுத்தடுத்து குறி வைக்கப்படுவதால், சந்திரசேகர ராவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

* ஒரே வாரத்தில் 2வது அமைச்சர்

கடந்த சில நாட்களாக தெலங்கானா அமைச்சர்களை வருமான  வரித்துறை குறி வைத்து சோதனைகள் நடத்த தொடங்கி உள்ளது. கடந்த வாரம் அமைச்சர் கங்குலா கமால்கர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, நேற்று மற்றொரு அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.

* ஜிஎஸ்டி ரெய்டும் - ஐடி ரெய்டும்

தெலங்கானாவில் முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்த கோமட்டிரெட்டி ராஜசேகர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் இணைந்தார். இத்தொகுதிக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜ வேட்பாளராக கோமட்டிரெட்டி ராஜசேகர ரெட்டி போட்டியிட்டார். ஆனால் டிஆர்எஸ் வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வெற்றி பெற்றார். இதற்கிடையில், பாஜ நிர்வாகிகளுக்கு கோமட்டிரெட்டி ராஜசேகரரெட்டி மூலம் ரூ.5.5 கோடி  பணப்பரிமாற்றம் நடந்ததாக மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

மேலும், ரூ.5.5 கோடி பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும்  டிஆர்எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரலாற்றில்  இல்லாத அளவிற்கு முனுகோடு இடைத்தேர்தலில் ரூ.640 கோடி வரை அரசியல் கட்சிகள்  பணம் செலவழித்ததாக தனியார் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இதுபோன்று  மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் பாஜ வேட்பாளரின் அலுவலகத்தில் சோதனை  நடத்துவதும், வருமான வரித்துறை அதிகாரிகள் மாநிலத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதும் தெலங்கானா அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: