×

தானே புயலால் சேதம் அடைந்த கடலூர் முதுநகர் பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

கடலூர்: கடலூர் முதுநகரில் கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், கடலூர் துறைமுக ரயில்வே சந்திப்பு ரயில் நிலையம் அருகே மிகப்பெரிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு பேருந்துகளின் வருகை நேரம் குறித்த தகவல் பலகையும் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிறுத்தம் கடலூர் முதுநகரில் இருந்து புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் கடலூர் துறைமுகம் ரயில்வே சந்திப்பில் இறங்கும் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்தில் ஏறி செல்வார்கள்.

இது ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த பேருந்து நிறுத்தத்தில் பராமரிப்பு குறையத் தொடங்கியது. இந்நிலையில் தானே புயல் வீசியபோது அந்த பேருந்து நிறுத்தம் முற்றிலும் சேதமடைந்தது.
மேற்கூரை இல்லாமல் தற்போது அந்த பேருந்து நிறுத்தத்தை பார்க்கும்போது ஒரு திறந்தவெளி பேருந்து நிறுத்தமாகவே காட்சியளிக்கிறது. இதனால் வெயில் காலங்களிலும் மழைக் காலங்களிலும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தப் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கக்கோரி பல்வேறு இயக்கங்களும், பொதுநல சங்கங்களும், கட்சியினரும், பல போராட்டங்களை நடத்தி பார்த்தும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. பொதுமக்கள் சார்பாக பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்யும் நேரங்களில் பயணிகள் ஓரிடத்தில் நின்று பேருந்து ஏற முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு பேருந்து நிறுத்தம் இப்படி சிதிலமடைந்து காட்சி அளிப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து மேற்கூரைகள் அமைத்து, அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே கடலூர் முதுநகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Cuddalore Muthunagar , Request for repair of Nizhalkudai at Cuddalore Mutunagar bus stop which was damaged by Thane storm
× RELATED கடலூர் முதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையே மோதல்..!