×

வீடு உள்பட 50 இடங்களில் ரெய்டு வருமான வரித்துறை அதிரடி, முக்கிய ஆவணங்கள் சிக்கின

ஐதராபாத்: தெலங்கானாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு உள்பட அவருக்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர ரெட்டி என்ற மகனும், மம்தா ரெட்டி என்ற மகளும் உள்ளனர். மல்லா ரெட்டிக்கு தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவ பல்கலைக்கழகம், என்ஜினியரிங் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும், மல்லா ரெட்டி நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளன. இவரது மகன் மகேந்திர ரெட்டி, மகள் மம்தா ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர ரெட்டி ஆகியோர் ரியல் எஸ்டேட் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 3 பேரும் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் மல்லா ரெட்டிக்கு சொந்தமான ஓம் பள்ளியில் உள்ள பண்ணை வீடு, ரூயா ஜன பள்ளி, நெட்சில்லாவில் உள்ள கல்லூரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் அவரது மகன், மகள், உறவினர்கள் வீடு என 50 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை குறித்து தகவல் அறிந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மல்லா ரெட்டி வீட்டின் முன்பாக குவிந்து வருகின்றனர்.  வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை பா.ஜ.க.வில் இணைவதற்கு தலா ரூ.100 கோடி பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சந்திரசேகர ராவின் மகள் கவிதா காங்கிரசில் இணைய உள்ளதாக பா.ஜ.க எம்.பி., தர்மபுரி அரவிந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த டி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் தர்மபுரி அரவிந்த் எம்.பி வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலங்கானா அமைச்சரின் வீடு அலுவலகங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டிஆர்எஸ் கட்சி கூறியுள்ளது. அதேநேரத்தில், இதில் அரசியல் இல்லை. விதி மீறி மற்றும் முறைகேடு புகார் எழுந்ததால்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக தெலங்கானாவில் உள்ள பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Income Tax department , Income Tax department raided 50 places including houses, important documents were seized
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...