புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னை: புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில், நதிநீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதைத்தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தின் போது, மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கு தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த இந்த நிலையில் மேகதாது அணையை நேரில் சென்று பார்வையிட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், நீர் மேலாண்மை கூட்டத்தின் போது, அது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், உச்ச நீதிமன்றத்தில் இன்று விளக்க மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இருக்கும் வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் முடியும் வரை காவிரி ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ள முடியாது.

குறிப்பாக மேக தாது குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அதேபோல் இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் சட்ட அறிவுறை வழங்கியதாக ஆணையம் சார்பில் தெரிவிப்பதை ஏற்றுகொள்ள முடியாது. மேகதாது முன்மொழியப்பட்ட நீர்த்தேக்க திட்டம் இல்லை. மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடகாவின் முயற்சி என்பது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறுவதாகும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக அரசு உரிய அனுமதி இல்லாமல் செயல்படுத்தி வரும் திட்டங்களை தடுக்க காவேரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.

இதில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது, உச்ச நீதிமன்றம் முன்னதாக இந்த வழக்கில் வழங்கிய இறுதி தீர்ப்பை உரிய வகையில் செயல்படுத்துகிறதா? நீர் பங்கீட்டில் ஏதேனும் பிரச்னை உள்ளதா? ஆகியவற்றை கண்காணிப்பது மட்டும் தான் வேலையாகும். இதை தவிர்த்து புதிய திட்டங்களுக்கான அனுமதி உள்ளிட்டவற்ற பரிசோதிப்பது கிடையாது. அதனை ஏற்கவும் முடியாது. குறிப்பாக மேகதாது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் எந்த ஆலோசனையும் மேற்கொள்ள முடியாது. என தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: