×

தமிழகத்தில் நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் 33,258 விவசாயிகளுக்கு பயீர்க்காப்பீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவம்பர் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் 61,365 ஏக்கரில் 33,258 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி, பிசானம்  நெற்பயிர்க் காப்பீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதனைத்  தொடர்ந்து, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ,  கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில், சனி (19.11.2022) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) உட்பட நவம்பர் 21ம் தேதி வரை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட வேளாண்மை உழவர் நலத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டின் சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரில் இதுவரை 23.83 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 10.94 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மொத்த சாகுபடி பரப்பில் காப்பீடு செய்வதற்காக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீத இலக்கிற்கு தமிழகத்தில் 88 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டில் இதே கால கட்டத்தில்,  20.22 இலட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 9.90 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது.  2021-2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பு 2022-2023 ஆம் ஆண்டில் சிறப்புப் பருவத்தில் சுமார் 17 சதவீதம் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவான நவம்பர் 15 ஆம் வரை சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரில் பொது சேவை மையங்கள் மூலம் 18.04 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 8.51 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். காப்பீடு செய்ய நீட்டிக்கப்பட்ட காலமான 21.11.2022 வரை விடுபட்ட 33 ஆயிரத்து 258 விவசாயிகளால் 61 ஆயிரத்து 365 ஏக்கர் கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டு மொத்தம் 18.65 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு 8.84 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். எனவே, இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகள் எவரும் விடுபடாமல் அனைத்து தமிழக விவசாயிகளையும் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags : Tamil Nadu ,Govt , Crop insurance for 33,258 farmers in Tamil Nadu extended till November 21: Tamil Nadu government notification
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...