ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.3,739.42 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (22.11.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில்  சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  சட்டமன்ற மானியக்கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், நிறைவு பெற்ற பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களின், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மண்டல வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை  விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்திற்கு பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மாதந்தோறும் துறையின் செயலாளர், ஆணையர், கூடுதல் ஆணையர்கள், தலைமை பொறியாளர் முன்னிலையில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் சீராய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம்  நடைபெற்ற 15 வது சீராய்வுக் கூட்டத்தில் 2021- 22 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் இடம் பெற்றிருந்த 3,769 பணிகள் குறித்தும், 2022 - 23 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகளில் இடம்பெற்றிருந்த 5,061 பணிகள் குறித்தும், குறிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் அறிவிக்கப்பட்டிருந்த 274 பணிகளின் முன்னேற்றத்தை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ரூ.3200 கோடி மதிப்பீட்டிலான இந்த 274 பணிகளுக்கு தற்போது டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு திருப்பணிகள் மேற்கொண்ட காலம் தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த காலம்தான். இன்றைய கூட்டத்தில் அதிகளவில் பக்தர்கள் வருகைதருகின்ற திருக்கோயில்களில் கூடுதலாக 5 திருக்கோயில்களின் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

பணிகள், 3 திருக்கோயில்களில்  முழு நேர அன்னதான திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், மேலும், 10 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், வள்ளலார் 200 முப்பெரும் விழாவினையொட்டி முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு முழுவதும் அன்னதானம் மற்றும் வாரந்தோறும் நடத்தப்படும் வள்ளலார் விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அரசு நிதி உதவியாக வழங்கப்படும் 3 கோடி ரூபாயை பயன்படுத்த வேண்டிய இனங்கள் குறித்தும், தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு நடைபயணமாக வருகின்ற பக்தர்களுக்கு நாள்தோறும் 10 ஆயிரம் நபர்களுக்கு 20 நாட்கள் அன்னதானம் வழங்குவது குறித்தும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் குடமுழுக்கு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

இதுவரை 7450 திருக்கோயில்களில் உழவாரப்பணி நடைபெற்றுள்ளது.  மீதம் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு உழவாரப் பணியை விரிவு படுத்துவது  குறித்தும், சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றவர்களுக்கு உதவிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சபரிமலையில் அரசு அலுவலர்களை நியமிப்பதோடு, பக்தர்களின் குறைகளை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம்  தகவல் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும்,  கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு விரிவான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிந்து மீட்டெடுக்கப்பட்ட நிலங்கள், குறித்தும். அதனுடைய மதிப்புகள், மீட்டெடுக்கப்பட்ட வேண்டிய சொத்துக்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அந்த வகையில் இதுவரை 3057 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, 3,739 கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுத்து இருக்கின்றது. நிலுவையில் இருந்த வாடகை தொகை 254 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்பட்டிருக்கின்றது,  இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 300க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தேறி இருக்கின்றது சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் 1500 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, 100 திருக்கோயில்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, தமிழக முதல்வர் இந்த ஆண்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில்களை புனரமைப்பதற்கு ரூபாய் 100 கோடியை ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.

அந்த 100 கோடியையும் இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் தொடங்குவது குறித்தும், நகர்புறங்களில் இருக்கின்ற 200 பழமையான கோவில்கள் புனரமைப்பதற்கும்,  சிவராத்திரியை முன்னிட்டு 5 திருக்கோயில்களில் பெரிய அளவில் சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும்,  பாம்பாட்டி சித்தருக்கு வருகின்ற டிசம்பர் 9 ந் தேதி நடத்தப்படும் விழா ஏற்பாடுகள் குறித்தும், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞர் தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தலமரக்கன்றுகளில், மீதம் நடப்பட வேண்டிய 13 ஆயிரம் மரக்கன்றுகளை விரைவில் நட்டு இத்திட்டத்தை விரைவில் பூர்த்தி செய்வது குறித்தும் இந்த சீராய்வு கூட்டத்தில் முழுமையாக கலந்தாலோசிக்கப்பட்டது.

கேள்வி : இந்து சமய அறநிலையத்துறையின் வேகமான செயல்பாட்டுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறதா?

பதில் : கடந்த ஆட்சி காலத்தில் மந்த நிலையில் இருந்த நிர்வாகம் முழுமையாக இன்றைக்கு முடுக்கிவிடப்பட்டு, எட்டுக்கால் பாய்ச்சலில் பணிகள் விரைந்து நடந்து கொண்டிருக்கின்றன. அலுவலர்களுக்கு உறக்கமே ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் தான். மீதம் இருக்கின்ற 19 மணி நேரமும் நாங்கள் எப்பொழுது அழைத்தாலும் எங்கள் தொடர்பில் இருக்கின்றார்கள். அது மாத்திரம் அல்லாமல் எங்களுடைய இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்களுக்கு வயர்லெஸ் கருவி தந்து இருக்கின்றோம்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைபேசியில் மண்டல இணை ஆணையரை அழைத்தால்  உடனடியாக பதில் கிடைக்கும். முதலமைச்சர் அளித்திருந்த சுதந்திரத்தின் காரணமாகத்தான் கேட்கின்ற திட்டங்களுக்கு எல்லாம் முதலமைச்சர் ஒப்புதல் தருவதின் காரணமாக இன்றைக்கு துறை வேகமான வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கின்றது. அலுவலர்களின் பணி சிறந்த முறையில் நாங்கள் முழு திருப்தி அடைகின்ற வகையில் அமைந்துள்ளது.

கேள்வி : பாஜக வை சேர்ந்த வி.பி.துரைசாமி நிலங்கள் மீட்பு விசயத்தில் உரிய ஆதாரங்களை காட்டுங்கள் என தெரிவித்துள்ளாரே ?

பதில் : தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தேவையற்ற கேள்விகளுக்கு பதில் கூறி எங்களுடைய காலத்தை நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. முதல்வர் பொறுத்தளவில் ஆக்கபூர்வமான பணிகளில் கவனத்தை செலுத்துங்கள் என்றும், போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் அவருக்கே என்று விட்டுவிடுங்கள் என்பதுதான் எங்களுக்கு காட்டிள்ள வழியாகும்.  இருந்தாலும் அவர் சொல்லிய குற்றச்சாட்டுக்காக ஒரே ஒரு விளக்கம் 06.04.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மீட்கப்பட்ட நிலங்களை குறித்து முதல் புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றோம்.

அதில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு நிலங்கள் மீட்கப்பட்டன, மீட்கப்பட்ட நிலங்களுடைய புகைப்படங்கள் மீட்கப்பட்ட நிலங்களின் அளவு அதனுடைய மதிப்பு அனைத்தையும் புள்ளிவிவரமாக வெளியிட்டு இருக்கின்றோம். அடுத்த புத்தகத்தையும் விரைந்து முடித்து வெளியிட உள்ளோம். தற்போது வரையில் ரூ.3,739 கோடியே 42 லட்சம் சொத்து மதிப்புடைய நிலங்களை மீட்டு இருக்கின்றோம். அவருக்கு இந்த புத்தகத்தை இன்றைக்கு தபாலிலோ அல்லது எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாகவோ அவருடைய வீட்டுக்கு கொண்டு சேர்க்கப்படும். இந்தத் துறையைப் பொறுத்தளவில் சொல்வதைத் தான் செய்கின்றோம் செய்வதைத்தான் சொல்லுகின்றோம்.

சொல்லியவற்றை செய்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் கட்டளையிட்டு இருக்கிறார்கள். எப்படி நாங்கள் இங்கு மாதந்தோறும் கூட்டத்தை நடத்துகிறோமோ, அதேபோல் முதலமைச்சர் அலுவலகத்தில் மாதந்தோறும் துறை சார்ந்த செயலாளர், ஆணையாளர் கூடுதல் ஆணையாளரை அழைத்து திட்டங்கள் குறித்தும், முன்னேற்றம், திட்டங்கள் செயல்படுகின்ற விதத்தையும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு ஆக்கபூர்வமான அரசு, செயல்படுகின்ற அரசு.

கேள்வி : இந்து முன்னணியின் மாநில தலைவர் ஆதீன சொத்துக்கள் அறிவாலய சொத்துக்கள் அல்ல என்று கூறியுள்ளது குறித்து ?

பதில் : இந்து சமய அறநிலையத்துறை ஆதீனத்தின் சொத்துகளில் தலையிடுகிறார்கள் என்பதுதானே நிருபரின் கேள்வி. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. நாங்கள் எங்காவது சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளோமா? எங்கெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல முடியுமோ அங்குதான் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க செல்கிறோமே தவிர, எங்களுக்கு சட்ட உரிமை இல்லாத இடத்திற்கு நாங்கள் எங்குமே செல்வதில்லை. அவர் அப்படி சட்டத்தை மீறி நாங்கள் எங்காவது செல்வதாக குறிப்பிட்டால் அதற்கு உகந்த பதிலை அளிக்கின்றோம். பொதுவாக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்கின்ற நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இல்லை.

கேள்வி : காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசிலிருந்து அழைப்பு வந்ததா?

பதில் : இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தளவில் ஒன்றிய அரசு எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அந்த நிகழ்ச்சிக்கு முறையாக எங்களுக்கு கடிதம்  வந்தால் அதற்கு இத்துறையும், அரசும் முழு ஒத்துழைப்பு நல்கிறது. சமீபத்தில் ஆதிசங்கரர் நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் கலந்து கொள்கின்ற அந்த நிகழ்ச்சியை மக்கள் அறியும் வண்ணம் 14 இடங்களில் எல்இடி திரை வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மூலம் 14 திருக்கோயில்களிலும் எல்இடி திரையை அமைத்துக் கொடுத்தோம்.

ஒன்றிய அரசு கேட்கின்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் ஆன்மீக சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று எங்களுடைய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே எங்களுடைய பணிகள் குறித்து இதுவரையில் ஒன்றிய அரசிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு எந்த தகவலும், கடிதமும் வரவில்லை. அப்படி ஏதாவது வந்தால் நாங்கள் முதலமைச்சரோடு கலந்து பேசி அதற்குண்டான நடவடிக்கை எடுத்து உதவிகளை புரிய தயாராக இருக்கிறோம்.

கேள்வி : திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது.

பதில் : இதுவரையில் சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் கோபுரம் உட்பட நான்கு கோபுரங்களிலும் கோபுரத்தை சுத்தம் செய்திருக்கின்றோம். 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், குறிப்பாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், போதிய  கழிப்பிட வசதிகள், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி சார்பிலும், திருக்கோயில் சார்பிலும் தூய்மை பணியாளர்களை ஏற்பாடு செய்திருக்கின்றோம். தடையில்லா போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 4000 காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். 2000 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கும், 16 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.

அறநிலையத்துறையின் சார்பில் 5 இணை ஆணையர்கள் தலைமையில் துணை ஆணையர்களையும் உதவி ஆணையாளரையும் கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு நியமித்திருக்கின்றோம். எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை பொறுத்து அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வதற்காக முதலமைச்சர் உத்தரவின்படி, கடந்த வாரம் நானும் அந்த மாவட்ட அமைச்சரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ. வேலு, துறையினுடைய செயலாளர், ஆணையாளர் நேரில் சென்று திருக்கோயிலுக்கு செல்லுகின்ற பொது வரிசை முதல் அனைத்து ஏற்பாடுகளையும், ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கியதன் அடிப்படையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எவ்வளவு அதிகமான பெரும் கூட்டம் வந்தாலும் சமாளித்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும். காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து மற்ற துறைகளோடு கைகோர்த்து சிறப்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கேள்வி : சில கோயில்களில் முக்கிய பிரமுகர்கள் கருவறை அருகில்  சென்று தரிசனம் செய்கின்ற முறை எப்போது கட்டுப்படுத்தப்படும்.  

பதில் : விஐபி தரிசனம் என்பது ஏதோ இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆரம்பித்தவை அல்ல. அதை படிப்படியாக குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 20 ரூபாய் கட்டண தரிசனத்தின் மூலம் ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்றாலும், அந்த  கட்டண தரிசனம் தேவையில்லை என்று முடிவு எடுத்து, அந்த வருமானத்தை திருக்கோயிலின் இதர வருமானத்தில் ஈடுசெய்துக் கொள்ளலாம் என்று ரத்து செய்துள்ளோம்.

நாளடைவில் படிப்படியாக எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் விஐபி தரிசனத்தை நிறுத்திட இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொள்ளும். திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின் போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும், விஐபி தரிசனத்தை நிறுத்தி விட்டோம். மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின்போது 600 நபர்கள் பாந்து என்ற முறையில் 10 நாட்கள் திருக்கோயில்  உள்ளே தங்கும் முறையை முழுமையாக ஒழித்து உத்தரவிட்ட அரசு இந்த அரசு.

அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலும், நீதிமன்றமும் இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கை சரியான நடவடிக்கை, திருப்பதி கோயிலில் இப்படி போய் இரவு யாராவது தங்க முடியுமா என்று ஒரு கேள்வியை கேட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது என தமிழகம் மாத்திரமல்ல மற்ற அண்டை மாநிலங்களும் பாராட்டினர்.  இந்த சிறப்பு கட்டண தரிசனத்தை, விஐபி தரிசனத்தை படிப்படியாக குறைப்பதற்கு முழுமையாக ஒழிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

கேள்வி : பாஜக பிசாசு வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று.. ?

பதில் : பாஜக ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கெல்லாம் வேலையில்லை. முதலமைச்சர் எப்படிப்பட்ட பேய்களையும், விரட்டக்கூடிய சக்தி படைத்தவர். ஆதலால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக காலூன்ற முடியாது. முதலமைச்சர் நேற்றைக்கு முன்தினம்கூட ட்விட்டர் செய்தியில், “விழித்துக் கொண்ட தமிழகத்தை இனி எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” என்று சொல்லி இருக்கின்றார்.

ஆகவே, தமிழக மக்கள் விழிப்போடு இருக்கின்றார்கள், பாஜக போன்ற கட்சிகள் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு இடமே இல்லை. இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா,  இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: