நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த இந்தோனேசியாவிற்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

டெல்லி: இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 252 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அவசர கால மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேட தேட கிடைக்கும் உடல்களால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கு பல நாட்டு தலைவர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில், நமது நாட்டு பிரதமர் மோடியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: