மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் சேதமான குடிநீர் தொட்டியை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்ரீ  தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 4 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டியில் குழாய் பொருத்தி பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாமல்லபுரம் திகழ்கிறது. மாமல்லபுரத்திற்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் சுற்றுலாப்பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக 5 ஆண்டுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த தொட்டியை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காமல்விட்டதால் குழாய்கள் சேதமடைந்து கடந்த 4 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் குடிநீர் கிடைக்காமல் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளாமல் கோயில் திருப்பணிக்காக பணம் வசூலிப்பதிலே ஆர்வம் காட்டுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு காட்சி பொருளான குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தி பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “தற்போது சீசன் களைக்கட்டியுள்ளதால்  ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு சிற்பங்களை  பார்த்து ரசித்துவிட்டு ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து குடிக்க வருகின்றனர். குடிநீர் தொட்டியில் குழாய் இல்லாததால் தாகத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்” என்றனர்.

Related Stories: