உலக கோப்பையில் இன்று 4 போட்டிகள்; நள்ளிரவில் நடப்பு சாம்பியன் பிரான்சுடன் ஆஸ்திரேலியா மோதல்

தோகா: உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. 22வது உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. பட்டம் வெல்ல தகுதியுள்ள அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா அணிக்கு லயோனல் மெஸ்சி கேப்டனாக செயல் பட உள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆனது.

இதையடுத்து டி பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகள் மோதி உள்ளன. இதில் டென்மார்க் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து சி பிரிவில் இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற 2 போட்டிகளும் டிரா ஆனது.

இதையடுத்து டி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பிரான்ஸ் அணி 3 முறையும், ஆஸ்திரேலியா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

Related Stories: