நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் இன்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலையில் 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த 2 வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வார நாட்களில் தினமும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்றும் மிக அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

ஆன்லைன் மூலம் மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிர நிலக்கல், திருவனந்தபுரம் குமுளி உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ஏராளமான பக்தர்கள் பதிவு செய்து நேற்று சபரிமலைக்கு வந்திருந்தனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி முதல் தினமும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முதல் மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் சபரிமலையில் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

Related Stories: