தேட தேட கிடைக்கும் உடல்கள்; நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த இந்தோனேசியா: பலி எண்ணிக்கை 252 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 252 பேர் உயிரிழந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 என பதிவாகியது. நில நடுக்கத்தினால் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளி கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 10 முதல் 15 நொடிகள் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அதில் வசித்தவர்கள் அலறி அடித்து தெருக்களை நோக்கி ஓடினர். சியாஞ்சூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜகார்த்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களை விட்டு சிலர் வெளியேறினர். மற்றவர்கள் கட்டடங்கள் குலுங்கியதாகவும், தளவாடங்கள் நகர்வதையும் உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது. பேரிடரில் சிக்கி சிறார்கள், பெண்கள் என 252 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக ஜாவா ஆளுநர் ரித்வான் தெரிவித்துள்ளார். 2200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: