×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா பறிமுதல்-15 கிலோ கஞ்சாவும் சிக்கியது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக மொத்தம் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ரூ. 1.61 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, சட்டவிரோத மது விற்பனை, மணல் கடத்தல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி வந்திதா பாண்டே பொறுப்பேற்றவுடன் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல இடங்களில் சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து இதற்கு காரணமானவர்களை கைது செய்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2022 ஜூலை 8ம் தேதி முதல் நவம்பர் 12ம்தேதி வரையிலான வழக்குகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, மதுவிலக்கு போலீசார் கடந்த 4 மாதங்களில் 1,375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் 21,978 உள்ளூர் உற்பத்தி மது பாட்டில்களும், 229 புதுச்சேரி மது பாட்டில்களும், 44 லிட்டர் கள்ள சாராயமும், 1,120 லிட்டர் சாராய ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மாவட்டம் முழுவதும் 37 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடர்புள்ள 62 பேரில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1.61 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 144 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடர்புள்ள 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.48.04 லட்சம் மதிப்புள்ள 3,109 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தல் தொடர்பாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக 51 மாட்டு வண்டிகளும், 11 இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும், 88 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் மொத்தம் 15 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், 9 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தலா ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவிலும், போதைத் தடுப்புப் பிரிவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Pudukottai district ,Gutka , Pudukottai: Police seized 3 tonnes of banned gutka worth Rs 48 lakh in Pudukottai district in the last 4 months.
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை