×

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் 8 ஆண்டாக வீட்டில் மின்சாரம் இல்லாமல் தெரு விளக்கு ஒளியில் படித்து வருகிறோம்

* பள்ளி மாணவர்கள் சீருடையில் வந்து மனு

* உடனே நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தி மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘‘8 ஆண்டாக வீடுகளில் மின்சாரம் இல்லாமல் தெருவிளக்கு ஒளியில் படிக்கின்றோம்’’ என்று பள்ளி மாணவர்கள் சீருடையில் வந்து மனு அளித்தனர். இதனை பெற்று கொண்ட டி.ஆர்.ஓ. உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, ஆதரவற்ற விதவைச் சான்று, வேலை வாய்ப்பு, நில மோசடி உள்ளிட்டவைகள் குறித்து மனு அளித்தனர். மொத்தம் 470 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அளித்த மனுவில், பிறந்து 7 மாத காலம் ஆன கைக்குழுந்தையுடன் ஒரு பெண் வந்தார். அவர், ‘‘திருப்பத்தூர் அடுத்த ஆம்பூரை சேர்ந்தவர் அருணா (24). இவருக்கும் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் கடந்த நூறாண்டுக்கு முன்பு திருமணமானது இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு விஜயகுமார் சென்னையில் பணி செய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். தற்போது 7 மாத குழந்தை உள்ளது. கணவர் இறந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு அரசு சார்பில் ஏதாவது வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட அருவாய் அலுவலர் வளர்மதி, வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தேவி என்பவர் அளித்த மனுவில், ‘திருப்பத்தூர் அடுத்த செவ்வத்தூர் பகுதியை சேர்ந்த தேவியாகிய (21) எனக்கும் கந்திலி அருகே உள்ள கும்முடிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த துளசிராமனுக்கும் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகனும் நான்கு மாத கைக்குழந்தையும் உள்ளது. துளசிராமன் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது அத்தை மகள் வேறு ஒருவரை தற்போது திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக உள்ளார். இதனை தட்டி கேட்டால் எனது மாமனார், மாமியார் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். தற்போது நான் கைக்குழந்தைகளுடன் நடுத்தெருவில் இருந்து வருகிறேன். என் கணவனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு ஊராட்சி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சீருடையுடன் வந்து அளித்த மனுவில், ‘‘பனந்தோப்பு பகுதியில் வசித்து வருகிறோம். எனது தந்தை பெயர் சந்துரு. இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். தாத்தாவின் வீட்டில் வசித்து வருகிறோம்.

இங்குள்ள வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வருகிறோம். படிப்பதற்காக தெருவிளக்கு ஒளியில் பாடம் படித்து வருகிறோம். எங்களுக்கு மின்னிணைப்பு வழங்க 30 ஆயிரம் ரூபாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ‘‘உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார். அப்போது, மாணவர்கள் புன்னகை ததும்ப நம்பிக்கையுடன் வெளியே வந்தனர்.

கிருத்திகா என்பவர் அளித்த மனுவில், ‘திருப்பத்தூர் அடுத்த ராவுத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் அதே பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். எனக்கு ஐந்து மாத கைக்குழந்தை உள்ளது. எனது மாமியார் வீட்டில் எனக்கு சேர வேண்டிய நகை பணம் உள்ளிட்டவைகளை கொடுக்காமல் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். எனது கணவரின் பணம் மற்றும் காப்பீட்டு பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

புஷ்பா என்ற மூதாட்டி அளித்த மனுவில், ‘‘திருப்பத்தூர் அடுத்த பூங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் பணியாற்றி வந்தேன். ஆனால் எனக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளனர்.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் எனக்கு எந்த உரிய தகவலும் அளிக்கவில்லை. எனக்கு பணிக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஆண்டியப்பனூர் கிராமவாசிகள் அளித்த மனுவில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டியப்பனூர் அணை உள்ளது. இந்த அணை தற்போது நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் ஆழம் குறைவாக உள்ள பகுதியில் சேரும் சகதியும் அதிகமாக உள்ளதால் இந்த அணையை தூர்வாரினால் தண்ணீர் அதிக அளவில் சேமிக்க வைத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடிவும்’’ என்று கோரிக்கை தெரிவித்து இருந்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ‘அந்தந்த  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இறுதியாக, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அனைத்து துறை அதிகாரிகளிடம் பேசும்ேபாது, ‘‘ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கிராம பொதுப்பிரச்சனைகள்  என மொத்தம் 437 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, குறை தீர்வு நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும், வருவாய்த்துறையின் சார்பில் 4 முதியோர்களுக்கு ஓய்வூதிய பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ₹1 லட்சம் மதிப்பிலான பேட்டரி சக்கர நாற்காலி மற்றும் 5 நபர்களுக்கு ₹5,000/- மதிப்பிலான ஊன்றுகோல்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் இராசசேகர், (வளர்ச்சி) ஹரிஹரன், தனித்துணை ஆட்சியர் கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில், அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வைக்க கோரிக்கை

ஆம்பூரை சேர்ந்த கோவிந்தராஜ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். வழக்கமாக கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வைப்பது வழக்கம். இருவரும் வந்திருந்தபோது வீல் சேர் இல்லாததால் மாற்றுத்திறனாளி நல அலுவலர் அலுவலகத்திற்கு நான்கு காலில் தவழ்ந்தும் வாயில் பையை கடித்துக் கொண்டும் சென்று மனு அளித்தனர்.
இச்சம்பவம் பார்ப்போர் நெஞ்சை நெகிழ செய்தது. எனவே, மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்  மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வைக்கவும் அதேபோல் அதனை கண்காணிக்க பணியாளர் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



Tags : Tirupattur Collector's Office , Tirupattur: The People's Grievance Redressal Day meeting was held at Tirupattur Collector's office yesterday. In this, 'The houses have been without electricity for 8 years
× RELATED திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில்...