×

பாசன குளத்தில் நச்சு கழிவுகளை கொட்டுவதால் மாசடைந்த தண்ணீரில் செத்து மிதக்கும் மீன்கள்-விராலிமலையில் கடும் அவலம்

விராலிமலை : விராலிமலையில் விவசாய பாசன குளத்தில் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நீர்வாழ் உயிரினங்கள் செத்து வருவதோடு, விவசாயத்திற்கு பயன்பாடற்ற நீராக மாறி வருகிறது. உடனடி நடவடிக்கை எடுக்க விட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-கீரனூர் சாலையில் சிறப்பு பெற்ற பட்டமரத்தான் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் அமைந்துள்ளது.

இக்குளக்கரையில் தான் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பாசன குளமான இக்குளத்தில் உள்ள நீரை வைத்து விராலிமலை, கலிங்கிப்பட்டி, சின்ன பழனிப்பட்டி, மாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு இக்குளத்தின் நீரே முக்கிய வாழ்வாதாரமாகும்.

மேலும் இக்குளத்தை சுற்றி அருண் கார்டன், கிருஷ்ணா நகர், சண்முகா நகர், ரத்னா கோல்டன் சிட்டி, சீனிவாச நகர், போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு இக்குளத்தின் நீரே முக்கிய குடிநீர் ஆதாரம். இந்நிலையில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் ஒரு சில தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகள் மற்றும் எண்ணைக் கழிவுகள் என அனைத்தும் வாகனம் மூலம் ஏற்றி வரப்பட்டு இரவு நேரங்களில் இந்த குளத்தில் கொண்டுவந்து கொட்டப்பட்டு வருவதால் அவை நீரில் கலந்து குளம் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லையாம். அதிகாரிகள் அலட்சியப்போக்கால் தற்போது மிகக்கடுமையாக நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த பாதிப்பின் தொடர்ச்சியாக இந்த குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் தன்மை மாறி புல், மரம், செடி கொடிகள் ஏதும் வளர தகுதியற்ற மண்ணிற்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாய நிலை உருவாகி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Viralimalai: Due to the continuous dumping of toxic wastes which are harmful to life in agricultural irrigation ponds in Viralimalai.
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...