×

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹87 ஆயிரத்து 320 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், சோளிங்கர் தாலுகா, பாணாவரம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாணாவரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் குளத்தில் முட்செடிகள் முளைத்து, புதர் மண்டிக்கிடக்கிறது. கோயிலுக்கு அருகே தொடக்கப்பள்ளி இயங்கி வரும் நிலையில், பாதுகாப்பற்ற முறையில் கோயில் குளம் உள்ளது. எனவே, அதனை சீரமைத்து கோயில் குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ெதாடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன்படி, மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட 4 பயனாளிகளுக்கு தலா ₹10 ஆயிரத்து 400 மதிப்பில் சிறப்பு நாற்காலிகள், 5 பயனாளிகளுக்கு தலா ₹2 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலி கருவி, 5 பயனாளிகளுக்கு தலா ₹1,500 மதிப்பிலான ஊன்றுகோல் தோள் தாங்கி, ஒரு பயனாளிக்கு ₹600 மதிப்பில் முழங்கை தாங்கி, 2 பயனாளிகளுக்கு தலா 1,960 மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், ஒரு பயனாளிக்கு ₹10 ஆயிரம் மதிப்பிலான திறன்பேசி என மொத்தம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹87 ஆயிரத்து 620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் 13 விடுதிகளில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்ற திமிரி அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் ஞானசேகரனுக்கு ₹10 ஆயிரம் காசோலை, 2வது இடம் பிடித்த அரக்கோணம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் ஹரிக்கு ₹5 ஆயிரம் காசோலை, 3ம் இடம் பிடித்த ராணிப்பேட்டை சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் அனிதாவுக்கு ₹3 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மேலும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ₹7 லட்சத்து 51 ஆயிரத்து 200 மதிப்பில் வங்கிக்கடனுதவி பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இதில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) பாபு, தாட்கோ மேலாளர் (பொறுப்பு)சசிகுமார் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Ranipet , Ranipet: In the People's Grievance Day meeting held at Ranipet Collector's office, ₹87 thousand was given to 18 differently abled persons.
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...