நெல்லை அருகே கோடகநல்லூர் தாமிரபரணி ஆற்றில் 1.6 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி-உதவி கலெக்டர் துவக்கிவைத்தார்

பேட்டை : உலக மீன்வள தினத்தை முன்னிட்டு கோடகநல்லூர் தாமிரபரணி ஆற்றில் 1.6 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியை பயிற்சி உதவி கலெக்டர்  கோகுல் துவக்கிவைத்

தார். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22ன் கீழ் தாமிரபரணி மற்றும்  வைகை ஆறுகளில் 10 லட்சம் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக  ரூ.27 லட்சம் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு  உள்ளது.

இதை செயல்படுத்தும் வகையிலும், உலக மீன்வள தினத்தை முன்னிட்டும் நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி கோடகநல்லூர் கிராமம், தாமிரபரணி ஆற்றில்  சுமார்  1.6 லட்சம் ரோகு மிருகால் மற்றும் சேல் கெண்டை மீன்குஞ்சு விரலிகள் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பயிற்சி உதவி கலெக்டர்  கோகுல், மீன்குஞ்சுகளை தாமிரபரணி ஆற்றில் விட்டு நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘தமிழகத்தில் உள்ள ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தை பெருக்கவும், ஆற்று மீன்பிடிப்பை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும், பெருகிவரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திட ஏதுவாகவும், ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மணிமுத்தாறு அரசு மீன் விதை பண்ணைகளில் மீன் குஞ்சுகள் உற்பத்தி பணிக்காக தாமிரபரணி, கடனாநதி, மணிமுத்தாறு மற்றும் சிற்றாறு நதிகளில் இருந்து சினை மீன்கள் சேகரிக்கப்பட்டு நுண்மீன்குஞ்சுகள்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 124 கி.மீ. நீளம் கொண்ட தாமிரபரணி ஆற்றில் நாட்டின மீன் இனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 7.5 லட்சம் மீன் குஞ்சு விரலிகள் இருப்பு செய்யப்பட உள்ளன’’ என்றார்.

நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், மீன்துறை ஆய்வாளர் தேன்மொழி, மீன்துறை சார் ஆய்வாளர் மகேஸ்வரி, கோடகநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்ரமணியன், பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், நெல்லை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் முருகன், மீனவர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: