செய்யாறில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 1967ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் புலவர் கோவிந்தன் முயற்சியால் 69 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி. இக்கல்லூரியில் பிஏ வரலாறு, பிஏ கணிதம், பிஏ அறிவியல் உள்ளிட்ட பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1969ம் ஆண்டு பொருளாதார பிரிவுகளும் 1975ம் ஆண்டு எம்.காம், பிஎஸ்சி விலங்கியல், பிஏ தமிழ் ஹிஸ்டரி ஆகியவை 1979, 80ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.

1981ம் ஆண்டு எம்ஏ என்று படிப்படியாக பல்வேறு முதுநிலை படிப்புகளும் தற்போது தரம் உயர்த்தப்பட்டு முனைவர் பட்டம் பெறும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு தேசிய தர கல்வி குழுமத்தால் த்ரீ ஸ்டார் மற்றும் பி.பிளஸ் தகுதி பெற்று செயல்பட்டு வருகிறது.திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சுவர் ₹99 லட்சத்தில் கட்டப்பட்டு முழுமை பெறாமல் உள்ளது. இதற்கு காரணம் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள்தான். இவ்வாறு முழுமை பெறாத சுற்றுச்சுவற்றில் உள்ள வழியாக கல்லூரி வளாகத்திற்குள் செல்லும் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சுவரை முழுமைப்படுத்திட ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிப்பிட வசதி, வகுப்புகளுக்கான டேபிள்-சேர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பல்வேறு பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திட வேண்டும். மைதானத்தில் போதை ஆசாமிகள் வருவதை தடுப்பதுடன் அங்குள்ள காலியிடத்தில் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும். மேலும் கல்லூரி பிரதான வாயில் கட்டப்பட்டு கடந்த 6 மாதமாக திறக்கப்படாமல் உள்ளதை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: