நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதைகளில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்படும் நடைபாதைகளில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகர்கோவில் மாநகரை அழகுப்படுத்தும் வகையில் மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். நகரில் உள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக இரு பக்கமும் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோர்ட் ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம், நடைபாதைகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நடைபாதைகளில் அழகிய அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபாதைகள் அமைத்தாலும் கூட, இதன் வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத வகையில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இடையூறாக உள்ளன.

பல இடங்களில் ஸ்டே கம்பிகள் உள்ளன. மழை காலங்களில் ஸ்டே கம்பிகளில் கூட மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ெபாதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்ற மின் வாரியம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த மின் கம்பங்களை அகற்றாமல் பணி நடக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ஒரு கம்பத்தை மாற்றி அமைக்க ரூ.45 ஆயிரம் வரை செலவாகும். நாகர்கோவில் மாநகர பகுதியில் மாற்றி அமைக்க, மாநகராட்சி தான் பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் மாநகராட்சி பணம் செலுத்த தயாராக இல்லை. கலெக்டர் அலுவலக சந்திப்பில் கூட மின் கம்பங்களை மாற்றாமல் தான் நடைபாதை அமைக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்ெகாண்டு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்ற முடியும் என்றனர்.

Related Stories: