×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமோக நெல் விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி-அறுவடை பணிகள் மும்முரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்போகம் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 2 லட்சம் டன் மகசூலை எதிர்பார்த்து அறுவடையை துவக்கிய விவசாயிகள், நெல் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாய விளை பொருட்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாங்கனிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக 50 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவை தவிர மலர்கள், காய்கறிகள், ராகி, சோளம், தென்னை, வாழை போன்ற உணவு தானியங்களும், விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

நடப்பாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை, பாரூர் பெரிய ஏரி போன்ற பாசன பகுதி மற்றும் இதர பாசனம் மூலமாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், திம்மாபுரம், மூங்கில்புதூர், பையூர், பெரியமுத்தூர், அவதானப்பட்டி, பாரூர், அரசம்பட்டி என மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பிபிடி, சோனா, ஜலபுல பொன்னி போன்ற சன்னரக நெற்பயிர்களை விவசாயிகள் முதல் போக சாகுபடி செய்திருந்தனர்.

பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியது. இதனால் இந்தாண்டு முன்கூட்டியே அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, அவ்வப்போது மழை பெய்ததன் காரணமாக, இந்தாண்டு முதல்போக நெல் சாகுபடி பூச்சிகள், நோய் தாக்குதல் போன்றவை எதுவும் இன்றி நன்கு விளைச்சல் கண்டு, மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தாண்டு முதல் போக நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது மழை இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி, நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணி ஆட்களை கொண்டும், ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களை தருவித்தும், அதன் மூலமாகவும் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் டன் நெல் உற்பத்தி முதல் போக சாகுபடியில் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 80 கிலோ எடை கொண்ட 40 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். தற்போது மகசூல் அதிகரிப்பால் 45 முதல் 50 மூட்டை நெல் வரை வரையில் ஏக்கருக்கு சுமார் 4 டன் அளவிற்கு நெல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மற்றொருபுறம் மகசூல் அதிகரித்தாலும் நெற்பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் அதிகபட்சமாக ₹1,200க்கு விற்பனை செய்யப்படுவதால் நடவு பணி, நெல் நாற்று, மருந்து தெளிப்பு, அறுவடை போன்ற செலவினங்கள் போக குறைந்த லாபம் கிடைக்கிறது.

சில நேரங்களில் நஷ்டங்களும் ஏற்படுகிறது. நெல் விற்பனை போக புல் விற்பதின் மூலமாகவே சிறிது லாபம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது புல் விளையும் குறைந்துள்ளதால் மகசூல் அதிகரித்தாலும் விவசாயிகளுக்கு லாபம் மிக குறைவாக கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு முதல் போக சாகுபடி மழையால் பாதிக்கப் பட்டு மகசூல் குறைந்த நிலையில் இந்தாண்டு மகசூல் அதிகரித்து உள்ளது மகிழ்ச்சி அளித்தாலும் விலை கிடைக்குமா என்கிற கேள்வி நிலவுவதாக கூறுகின்றனர்.

இருப்பினும் இந்தாண்டு மகசூல் அதிகரிப்பு காரணமாக நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக இம்மாவட்டத்தில் விளையும் சன்ன ரக நெல்லுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால் விவசாயிகள் ஆண்டுதோறும் இரு போக நெல் சாகுபடியில் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Amoka Paddy ,Nirachal ,Krishnagiri District , Krishnagiri: Farmers are busy in the harvesting of paddy cultivated in the first phase of Krishnagiri district.
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...