×

திருவான்மியூர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புத்தர், ராமர் உட்பட 15 பழங்கால சிலைகள் மீட்பு-தனிப்படையை பார்த்து புரோக்கர் தப்பியோட்டம்

சென்னை : திருவான்மியூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கிவைத்திருந்த நடராஜர், ராமர், புத்தர், விநாயகர் உட்பட 15 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.சென்னையை சேர்ந்த பழங்கால சிலைகள் சேரிக்கும் நபர்களிடம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், ‘தன்னிடம் உள்ள பழமையான சிலைகளை’ விற்பனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்ததும், டிஎஸ்பி முத்துராஜா வியாபாரி போல, சிலை புரோக்கர் சுரேந்திரனை தொடர்புகொண்டு சிலைகளை வாங்கப்போவதாக பேசியுள்ளார். முதலில் சிலைகள் குறித்து வாய் திறக்க மறுத்தார் சுரேந்திரன். பின்னர், வாங்க நினைப்பவர் உண்மையிலேயே வியாபாரி என்பது உறுதியான பிறகே டிஎஸ்பி முத்துராஜாவிடம், சிலைகள் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டார். இதன்பிறகு விற்பனை செய்யப்படும் 15 சிலைகள் குறித்து புகைப்படங்களை டிஎஸ்பியின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்காக பல நூறு கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார்.

அப்போது டிஎஸ்பி முத்துராஜா, ‘நாங்கள் சிலைகளை பார்த்து பிறகே நீங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க முடியும்’’ என்று கூறியுள்ளார்.இதன்பிறகு ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுரேந்திரன், ‘சிலைகள் அனைத்தும் சென்னை திருவான்மியூர் பகுதியில் ஒரு வீட்டில் உள்ளது. நானும் அங்கே இருக்கிறேன் என்று வீட்டு முகவரியை கூறி வரச் சொன்னார். இதையடுத்து டிஎஸ்பி முத்துராஜா, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வியாபாரி போல, சுரேந்திரனுடன் சிலை வைக்கப்பட்டுள்ள ரமேஷ் பாந்தியா என்பவரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு சிலைகள் குறித்து பேசி கொண்டிருந்தபோது சிலையை வாங்க வந்துள்ள நபர்கள் போலீசார் என்று தெரிந்ததும் சுரேந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதையடுத்து டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் போலீசார், ரமேஷ் பாந்தியா வீட்டில் அதிரடி சோதனை நடத்தி உலோகத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை, தேவி, புத்தர், நந்தி, நடராஜர், ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணர், சீதை, நர்த்தன விநாயகர்,  நடனமாடும் நடராஜர் சிலை உட்பட பல கோடி மதிப்புள்ள 15 சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சிலைகளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரமேஷ் பாந்தியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் எந்த கோயில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தப்பி ஓடிய புரோக்கர் சுரேந்திரனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Tags : Buddha ,Rama ,Thiruvanmiyur , Chennai: The Anti-Idol Smuggling Unit has recovered 15 idols including Nataraja, Rama, Buddha and Ganesha, which were hidden in a house in Thiruvanmiyur area.
× RELATED கடலை அடைத்த கருணாமூர்த்தி