×

ஆரணியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம் 3 கி.மீ. விரட்டி ₹7 லட்சம் குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீசார்-ராஜஸ்தான் வாலிபர்கள் 2 பேர் கைது

ஆரணி : ஆரணியில் சினிமா பாணியில் போலீசார் சொகுசு காரை 3 கி.மீ. தூரம் விரட்டி ₹7 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சப்-டிவிசனுக்குட்பட்ட ஆரணி டவுன், களம்பூர், கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான ஆன்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து மொத்த விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிபில் ஈடுபட்டனர். அப்போது, ஆரணி டவுன் பகுதிகளில் உள்ள பங்க் கடைகளுக்கு  பெங்களூருவில் இருந்து வடமாநில இளைஞர்கள் மூலம் காரில் போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனால், ஒரு கடையின் உரிமையாளரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, ஆரணி பகுதிகளுக்கு உள்ள பங்க் கடைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் தினமும் கடத்தி வந்து விற்பனை செய்யும், நபர்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொண்டு, போதை பொருட்கள் கடத்தி வரும் நபர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் வடமாநில இளைஞர்கள் பெங்களூருவில் இருந்து நேற்று காலை சொகுசு கார் மூலம் ஆரணிக்கு குட்கா கடத்தி வருவது தெரியவந்தது. அதன்பேரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழ், எஸ்ஐகள் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரேசன்  ஆகியோர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் பங்க் கடை உரிமையாளரை குட்கா கடத்தி வரும் நபர்களிடம் போனில் பேச வைத்து, அவர்கள் வரும் வழி மற்றும் இடத்தை கேட்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் மூலம் சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து கடத்தல் கும்பல் விஏகே நகர் வழியாக நேற்று காலை வந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கினர்.  இதனை கண்ட வடமாநில இளைஞர்கள் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு, காமக்கூர், ராகுநாதபுரம் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றனர். தொடர்ந்து, போலீசார் வாகனங்களில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று,  பசும்பொன்நகர் பகுதியில் உள்ள சமயபுரம் அம்மன் கோயில் அருகில் காரை மடக்கி பிடித்தனர்.
அப்போது,  காரில் இருந்த 2 பேரில் ஒருவர் கீழே இறங்கி தப்பி ஓடினார்.

மற்றொருவர் காரில் கதவை மூடிக்கொண்டு திறக்கவில்லை. இதனால், போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து ஒருவரை பிடித்தனர். மேலும் தப்பி ஓடியவரையும் பொதுமக்கள்  உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சுமார் ₹7 லட்சம் மதிப்புள்ள 23 மூட்டைகள் போதை பொருட்களுடன் காரை பறிமுதல் செய்து ஆரணி நகர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பாலால்(30), பிரகாஷ்(32) என்பது தெரியவந்தது. இவர்களில் சம்பாலால் ஆரணி டவுன் பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். சம்பாலால், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.குட்கா கடத்திய சொகுசு காரை போலீசார் சினிமா பாணியில் 3 கி.மீ. தூரம் விரட்டி பிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Arani ,km. ,Rajasthan ,Gutka , Arani: In Arani, the police drove a luxury car for 3 km in cinema style. Gutka worth ₹7 lakh was seized after being chased away.
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...