சேலத்தில் வீட்டின் முன்பு தர்ணா நடத்திய விவகாரம் ஆசிரியை பலாத்காரம்; காதலன் மீது வழக்கு-பெற்றோர் மீதும் நடவடிக்கை

சேலம் : சேலத்தில் ஆசைக்காட்டி பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பள்ளி ஆசிரியை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், காதலன் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள உடையார்பாளையம் நேருநகரை சேர்ந்தவர் முருகேசன் மகள் சுகன்யா (28). பள்ளி ஆசிரியையான இவர், நேற்று முன்தினம், சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பேச்சியம்மன்தெருவில் உள்ள கோகுல் (27) என்பவரது வீட்டிற்கு வந்து, திடீரென வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், கோகுல் தன்னை காதலித்து திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்தார். பிறகு கருவை கலைத்துவிட்டு, திருமணமும் செய்து ஏமாற்றி விட்டார், எனக்கூறினார். காதலன் கோகுலின் பெற்றோர் வெளியே வந்து, ஆசிரியை சுகன்யாவிடம் தகராறு செய்தனர். இதை அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். பின்னர், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஆசிரியை சுகன்யா, டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘‘கோகுல் கடந்த 2019ம் ஆண்டில் தன்னை காதலித்து சென்னைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு கருவை கலைத்துவிட்டார். திருமணம் செய்துகொள்ள கேட்டபோது, திருவாகவுண்டனூரில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டி, ஓரிருநாள் ஒன்றாக வாழ்ந்தார். பின்னர், தாலியை கழற்றிவிட்டு, எனது ஜாதி பெயரை சொல்லி திட்டி, ஒன்றாக வாழ முடியாது எனக்கூறிவிட்டார். அவரது பெற்றோர் மற்றும் சகோதரரும் என்னை அசிங்கமாக திட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக்கூறியிருந்தார்.  

இப்புகார் குறித்து இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி, காதலன் கோகுல், அவரது தாய் ரேணுகாதேவி, தந்தை ரவி, அண்ணன் சந்தோஷ் ஆகிய 4 பேர் மீதும் எஸ்சி, எஸ்டி பிரிவு உள்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து மேல் விசாரணையை டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன் நடத்தி வருகிறார். அதில், காதலன் கோகுல் மீது ஏற்கனவே ஆத்தூர் போலீசில் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. கோகுலின் பெற்றோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: