நாகப்பட்டினம் அருகே ஈஸ்வரன் கோயில் திருவாச்சியை விற்க முயன்ற வாலிபர் கைது

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே ஈஸ்வரன் கோயில் திருவாச்சியை விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.நாகப்பட்டினம் அருகே அந்தனபேட்டை அண்ணாமலை நாதர் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அபிமுக்தீஸ்வரர் கோயில் வேளாங்கண்ணி அருகே குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த கோயில் அர்ச்சகராக குறிச்சி சிவன் கோயில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் உள்ளார்.

கோயில் பழுதடைந்துள்ளதால் சுவாமியின் அலங்கார பொருட்கள் , அர்ச்சகர் ஹரிஹரன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதில் அவ்வாறு வைக்கப்பட்டுள்ள அலங்கார பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகத்தின் கீழ் ஆய்வு செய்வது வழக்கம்.அதன்படி, அந்தனப்பேட்டை அண்ணாமலை நாதர் கோயில் செயல் அலுவலர் சண்முகராஜ், குறிச்சி அபிமுக்தீஸ்வரர் கோயில் கணக்கர் ராதாகிருஷ்ணனை அனுப்பி அலங்கார பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஆய்வு செய்தபோது கோயிலுக்கு சொந்தமான செம்பிலான ஒரு மீட்டர் நீளமுடைய ஒரு திருவாச்சியை காணவில்லை. இது குறித்து ஹரிஹரனிடம் ராதாகிருஷ்ணன் கேட்ட போது அர்ச்சகர் தனது மகனை கேட்க வேண்டும் என்று கூறினார்.

இதுதொடர்பாக சண்முகராஜ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சகர் மகன் முத்துக்குமரனிடம் (27) விசாரணை மேற்கொண்டதில், செம்பால் செய்யப்பட்ட திருவாச்சியை 4 துண்டுகளாக வெட்டி விற்பனை செய்ய வைத்திப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேளாங்கண்ணி போலீசார் திருவாச்சியை பறிமுதல் செய்து முத்துகுமரனை கைது செய்தனர். இந்த திருவாச்சியின் மதிப்பு ₹14 ஆயிரம் ஆகும்.

Related Stories: