×

தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது: அவ்வை நடராஜன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் (86) நேற்று (21.11.2022) காலமானார் என்ற துயரச் செய்தி, ஆழ்ந்த வேதனையளிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழறிஞர் குடும்பத்தில் பிறந்த நடராசன், “புலிக்கு பிறந்தது பூனையாகாது” என்ற முதுமொழியின் இலக்கியமாக வாழ்ந்தவர்.

தமிழ்நாட்டின் சிறந்த கல்வியாளரான ஔவை நடராசன் உயர்கல்வியில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். இரு மொழிகளிலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மிக நல்ல பேச்சாளர். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகவும், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் தலைமைக் குழுவில் பணியாற்றியும், சர்வதேச தமிழ் ஆய்வு அமைப்புகளில் பொறுப்பேற்றும், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர். நாட்டின் உயர் விருதான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகள் பெற்ற சிறப்புக்குரியவர்.

இவரது உயர்கல்வி அறிவும், தமிழாய்வு ஆற்றலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் பொறுப்புக்கு உயர்த்தியது. ஐஏஎஸ் அல்லாத துறைச் செயலாளராக எட்டாண்டுகள் பணியாற்றி சாதனை படைத்தவர். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர். உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஔவை நடராசன் பெயரில் அறக்கட்டளை நிறுவப் பெற்று, ஆண்டுதோறும் தமிழாய்வு நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழாய்வு உலகில் பிரகாசித்து வந்த ஒரு சுடரொளி மறைந்து விட்டது. இது தமிழாய்வு உலகில் ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழாய்வு உலக அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. வருத்தத்துடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Mutharasan ,Avvai Natarajan , A shining light in the world of Tamil Studies has disappeared: Mutharasan mourns the death of Avvai Natarajan
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...