வட சென்னையில் முதன் முதலாக தொடங்கப்பட்ட அம்பேத்கர் கல்லூரி பொன்விழா: முன்னாள் முதல்வர், மாணவர்கள் பங்கேற்பு

பெரம்பூர்: வடசென்னை பகுதி மாணவர்களின் நலன் கருதி, முதல் முதலாக 1973ம் ஆண்டு, வியாசர்பாடி பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியை கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி ஒரே ஒரு துறையுடன் இயங்கி வந்தது. அதன் பின்பு வளர்ச்சியடைந்து தற்போது தமிழ் ஆங்கிலம், கணிதவியல், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், உளவியல், பொருளியல், பாதுகாப்பு மற்றும் போர்பணித்துறை உள்ளிட்ட 17 துறைகளில் வளர்ச்சியடைந்து, வடசென்னை மக்களின் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இந்த, கல்லூரியில் 8 முதுகலை மற்றும் 5 ஆராய்ச்சி துறைகளும் உள்ளன. 89 பேராசிரியர்களும், 31 கவுரவ விரிவுரையாளர்களும், 11 ஆசிரியரில்லா பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 3,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நேற்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர்,  கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆன் சீனிவாசன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சுமதி பேசுகையில், ‘‘பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கல்லூரி பொன்விழா கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கல்லூரியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை பட்டியல மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ் மொழி படிக்கும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நமது கல்லூரியிலும் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலையும் கிடைக்க வழிவகை செய்து வருகிறது. இதில்,  அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர்கள் கல்வியை தவிர விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்,’’ என்றார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் மதிவாணன், அலெக்சாண்டர், சந்தானகிருஷ்ணன், தனஞ்செழியன், ஆனந்த் உள்ளிட்ட  ஏராளமான பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வளாகத்தில் கலைஞர் சிலை: நிகழ்ச்சியில் பெரம்பூர் எம்எல்ஏ  ஆர்.டி.சேகர் பேசுகையில், ‘‘மறைந்த தலைவர் கலைஞரால் தொடங்கப்பட்ட  இந்த கல்லூரி  இன்று பொன்விழாவை கொண்டாடுவதும், இந்த விழாவில் நான் கலந்து  கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சி. இந்த  கல்லூரி வளாகத்தில் கலைஞரின் மார்பளவு சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி  சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள்  ஏற்படுத்துவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் நிதி அல்லது உயர் கல்வித் துறை  அமைச்சரிடம்  கூறி, இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து  தரப்படும்,’’ என்றார்.

Related Stories: