×

சென்னை விமான நிலையத்தில் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு; பயணிகளை விரைந்து அனுப்பலாம்: 2 புதிய ஏஜென்சிகள் நியமனம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு  முன் 398 உள்நாட்டு விமானங்கள், 116 பன்னாட்டுவிமானங்கள் என 514 விமானங்கள்  இயக்கப்பட்டன. அதைபோல் நாளொன்றுக்கு 38 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் 8  ஆயிரம் பன்னாட்டு பயணிகள் என 46 ஆயிரம் பயணிகள் பயணித்துக் கொண்டு  இருந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னையில் இருந்து  மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 37 புறப்பாடு விமானங்கள், 37  வருகை விமானங்கள், நாளொன்றுக்கு 74 பன்னாட்டு விமானங்கள்  இயக்கப்படுகின்றன. அதேபோல் 328 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  சென்னை விமான நிலையத்தில் தற்போது 402 விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை 50  ஆயிரத்தை கடந்து விட்டது.

உள்நாட்டு  விமானநிலையத்தில் 328 விமானங்களில் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு  பயணிகளும், 74 பன்னாட்டு விமானங்களில் 11 ஆயிரம் வருகை, புறப்பாடு  பயணிகளும் என 51 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க புறப்படுவது மற்றும் விமான பயணிகளின் உடைமைகளை கையாள்வது போன்ற  பணிகளை செய்வதற்காக தற்போது, ஒரு ஏஜென்சி மட்டுமே உள்ளது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் புதிதாக மேலும் 2 கிரவுண்ட் ஹோல்டிங் தனியார் ஏஜென்சிகளை, இந்திய விமான நிலைய ஆணையம் நியமித்துள்ளது. இதன்படி தற்போது மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரூ ஆகிய விமான நிலையங்களில், கிரவுண்ட் ஹோல்டிங்கில் ஈடுபட்டு வரும், பிரபல 2 ஏஜென்சிகளை சென்னை விமான நிலையத்தில் கூடுதல், கிரவுண்ட் ஹோல்டிங்காக ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த புதிய ஏஜென்சிகளிடம் அதிநவீன கருவிகள் மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதாகவும், இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்ற தரைதளப்பணிகள், இனிமேல் துரிதமாக நடக்கும். அதைபோல் விமான பயணிகளின் உடைமைகளை கையாளுவதும் அதிவேகமாக நடக்க இருப்பதால், பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.   இந்த 2 புதிய ஏஜென்சிகளிலும், சுமார் 4,000 பேர் பணியமர்த்தப்படள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் 4,000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.  

புதிதாக பணிக்கு வருபவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் பிசிஏஎஸ் பாஸ்கள், போலீஸ் வெரிபிகேஷன், மருத்துவ பரிசோதனை போன்ற அனைத்தும் முடித்து, இவர்கள் அடுத்த 2023ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின்பு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது, தரையிறங்குவது தாமதமின்றி நடைபெறும். அதைப்போல் பயணிகள் தங்களுடைய உடைமைகளை எடுத்துச்செல்வதற்கு நீண்டநேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Chennai Airport , 4,000 jobs at Chennai Airport; Passengers can be expedited: Appointment of 2 new agencies
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...