இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 162 பேர் பலி: 700 பேர் படுகாயம்

ஜகார்த்தா:  இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் பலியாயினர். 700   பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 என பதிவாகியது. நில நடுக்கத்தினால் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளி கட்டிடம் உள்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 10 முதல் 15 நொடிகள் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அதில் வசித்தவர்கள் அலறி அடித்து  தெருக்களை நோக்கி ஓடினர். சியாஞ்சூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜகார்த்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களை விட்டு சிலர் வெளியேறினர். மற்றவர்கள் கட்டடங்கள் குலுங்கியதாகவும், தளவாடங்கள் நகர்வதையும் உணர்ந்ததாகவும் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை 162 பேர் பலியாகி உள்ளனர். 700 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர்.கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ராவில் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில்  25 பேர் இறந்தனர். 460 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: