×

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5வது சதம்; 277 ரன் விளாசி ஜெகதீசன் உலக சாதனை; அருணாச்சலை வீழ்த்தியது தமிழகம்: சாதனை மேல் சாதனை!

பெங்களூரு: விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில், அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 277 ரன் விளாசிய தமிழக அணி தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் லிஸ்ட் ஏ போட்டிகளில் உலக சாதனை படைத்தார். எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் - அருணாச்சல் அணிகள் மோதின. டாஸ் வென்ற அருணாச்சல் பந்துவீச்சை தேர்வு செய்தது. சாய் சுதர்தன், நாராயண் ஜெகதீசன் இணைந்து தமிழக இன்னிங்சை தொடங்கினர். இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தியதுடன் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்  சேர்த்தனர்.

சுதர்சன் 154 ரன் (102 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். இரட்டை சதம் அடித்த ஜெகதீசன் 277 ரன் (141 பந்து, 25 பவுண்டரி, 15 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். தமிழ்நாடு 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன் குவித்தது. அபராஜித், கேப்டன் இந்திரஜித்  தலா 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து  507 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அருணாச்சல் 28.4 ஓவரில் 71 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு 435 ரன் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றியை பதிவு செய்தது. தமிழகம் பந்துவீச்சில் மணிமாறன் 5 விக்கெட், ரகுபதி சிலம்பரசன், எம் முகமது தலா 2, சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

* தமிழகம் எடுத்த 506 ரன், லிஸ்ட் ஏ தொடரில் ஒரு அணியி அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 498 ரன் குவித்து படைத்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.
* விஜய் ஹசாரே தொடரில் கடந்த  ஆண்டு மும்பை அணி  புதுச்சேரிக்கு எதிராக  457 ரன் குவித்த சாதனையும் முறியடிக்கப்பட்டது.
* லிஸ்ட் ஏ ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை ஜெகதீசன் (277) வசமானது. முன்னதாக, 2002ல் கிளமார்கன் அணிக்கு எதிராக  சர்ரே அணியின் அலிஸ்டர் பிரவுன் 268 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* சர்வதேச அளவில்  இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 264 ரன் எடுத்திருக்கிறார்.
* நடப்பு தொடரில் மழையினால் கைவிடப்பட்ட ஆட்டம் உட்பட 6 ஆட்டங்களில் ஜெகதீசன் 799 ரன் குவித்துள்ளார் (சராசரி 159, சதம் 5). 2020-21 விஜய் ஹசாரே தொடரில் 827 ரன் குவித்த பிரித்வி ஷா முதலிடம் வகிக்கிறார்.
* உலக அளவில் லிஸ்ட் ஏ ஒருநாள் ஆட்டத்தில் 435 ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, சாமர்செட் அணி 1990ல் டெவோன் அணிக்கு எதிராக 346 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
* சுதர்சன் - ஜெகதீசன் தொடக்க ஜோடி கடந்த 6 ஆட்டங்களில் முறையே 49, 5 (பீகார், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது), 73, 114 (ஆந்திரா, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி),  121, 107 (சட்டீஸ்கர், 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி), 117, 168 (கோவா, 57ரன் வித்தியாசத்தில் வெற்றி), 67, 128 (அரியானா, 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி), 154, 277 ரன் (அருணாச்சல், 435 ரன் வித்தியாசத்தில் வெற்றி) குவித்துள்ளனர்.
* விஜய் ஹசாரே தொடரின் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையும் ஜெகதீசன் வசமானது (15 சிக்சர்). இதற்கு முன் 2019-20 தொடரில்  யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்சர் விளாசி இருந்தார்.

Tags : Vijay Hazare ,Vlasi Jagatheesan ,Tamil Nadu ,Arunachal , Vijay Hazare's 5th consecutive century in the series; Vlasi Jagatheesan's world record of 277 runs; Tamil Nadu defeated Arunachal: achievement after achievement!
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...