×

6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை பந்தாடியது இங்கிலாந்து

தோஹா: கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது. கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்தினர். ஈரான் அணி தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால், முதல் அரை மணி நேரத்தில் கோல் ஏதும் விழவில்லை. அதன் பிறகு வியூகத்தை மாற்றி தாக்குதலை தீவிரப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு ஜூட் பெல்லிங்காம் (19 வயது) 35வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

உலக கோப்பையில் கோல் அடித்த முதல் ‘2K கிட்’ என்ற பெருமை பெல்லிங்காமுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து புகாயோ சகா (35’), ரகீம் ஸ்டெர்லிங் (45’+1’) கோல் போட, இடைவேளையின்போது இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியில் புகாயோ சகா (62வது நிமிடம்) தனது 2வது கோல் அடித்து அசத்தினார். மனம் தளராமல் கடுமையாகப் போராடிய ஈரான் அணிக்கு மெகதி தரேமி 65வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு நம்பிக்கை அளித்தார்.

எனினும், பந்தை துடிப்புடன் கடத்திச் சென்று அலை அலையாக தாக்குதல் நடத்திய இங்கிலாந்து அணிக்கு வில்சன் (75’), கிரீலிஷ் (90’) கோல் அடிக்க, அந்த அணி 6-1 என முன்னிலையை அதிகரித்தது. கடைசி தருணத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெகதி தரேமி (90’+13’) ஆறுதல் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

தேசிய கீதம் புறக்கணிப்பு: போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஈரான் தேசிய கீதம் ஒலித்தபோது, அந்த நாட்டில் ஹிஜாப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் அணி வீரர்கள் மவுனமாக நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அரங்கில் இருந்த ஈரான் ரசிகர்களும் கூக்குரலிட்டு அந்நாட்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Tags : England ,Iran , England beat Iran 6-2
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...