கணவர், குழந்தைகளை விட்டு ஓடிவந்த தூத்துக்குடி இளம்பெண் கள்ளக்காதலனுடன் சாவு: சேலம் அருகே காட்டில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு

சேலம்: வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் காட்டிற்குள் மர்மமான முறையில் கள்ளக்காதல் ஜோடி இறந்து கிடந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமந்துறை கல்வராயன்மலை காட்டுப்பகுதியில் ஆண், பெண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் கருமந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரும், இளம்பெண்ணும் தலைகுப்புற சடலமாக கிடந்தனர். அருகில் ஒரு பைக் நின்றிருந்தது. அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால், இறந்து 5 நாட்கள் இருக்கும் எனத்தெரியவந்தது.

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மாயமானவர்களின் பட்டியலை எடுத்து போலீசார் விசாரித்தில், இறந்த வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரிக்காலனூர் அருகே தொடரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (26) என்பதும், நெல் அறுவடை இயந்திர டிரைவரான இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாயமானதும் தெரிய வந்தது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பூபாலன், தூத்துக்குடிக்கு நெல்அறுவடை இயந்திரத்துடன் சென்றபோது  முறப்பநாடு அடுத்த ஆல்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி  வேம்புராஜியுடன் (24)  பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் ஜோடியாக உலா வந்துள்ளனர்.

இந்தநிலையில், வேம்புராஜி தனது 3 குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த மாதம் 27ம்தேதி பூபாலனுடன் ஓடி வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக பல இடங்களில் சுற்றிய கள்ளக்காதல் ஜோடியினர், ஒரு வாரத்திற்கு முன்பு பூபாலனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு பிரச்னை ஏற்படவே இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டனர்.இந்நிலையில்  இருவரும் காட்டிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் தான், அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: