கும்பகோணத்தில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகம்: இந்து முன்னணி நிர்வாகி கைது

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (38). கொத்தனாரான இவர், இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சக்ரபாணி குடும்பத்தோடு தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5மணியளவில் அவரது வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. புகாரின்படி கும்பகோணம் கிழக்கு போலீசார் வந்து விசாரித்தனர். தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்பிரியா நேரில் விசாரித்தார்.

மோப்பநாய் அருகே உள்ள புறவழிச்சாலை வரை சென்று திரும்பவும் சக்கரபாணி வீட்டின் வாசலில் வந்து நின்றது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சக்கரபாணி மற்றும் அவரது மனைவி மாலதியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தனித்தனியாக விசாரித்தனர். இதில் சக்கரபாணி தன்னை மிகைப்படுத்திக் கொள்வதற்காகவும், தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதாலும் தானே மண்ணெண்ணெய் வெடிகுண்டை தயாரித்து வீட்டு வாசலில் வைத்து நாடகம் ஆடியதும், அந்த பாட்டிலில் எரிந்த திரியின் துணி அவர்களது வீட்டில் இருந்த போர்வையில் இருந்து கிழிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் 436ன் (வெடிபொருளால் கட்டிடத்தை சேதப்படுத்த முயற்சி) கீழ் வழக்குப் பதிந்து சக்கரபாணியை நேற்று இரவு கைது செய்தனர்.

Related Stories: