×

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து உத்தரவை திரும்ப பெற்றது ஐகோர்ட்: இறுதி விசாரணை வரும் 29ம் தேதி தள்ளிவைப்பு

சென்னை: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், சட்டப்படியான தடை உள்ளதாக கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என வாதிடப்பட்டது. காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரிய சிவசங்கர் பாபாவின் மனுவை இறுதி விசாரணைக்காக நவம்பர் 29ம் தேதி பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

Tags : ICourt ,Shiv Shankar Baba , Court withdraws order to quash case against Shiv Shankar Baba: Final hearing adjourned to 29th
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு