தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் திலைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2000ம் ஆண்டு  கலைஞரால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் 2010ம் ஆண்டு ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 0.44 ஏக்கர் பரப்பளவு இடத்தில், 358.80 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் மைய மண்டபத்தில் ஏழு கலசங்களுடன், எந்த திசையிலிருந்தும் தமிழிசை மூவரைக் காணும் வகையில் இம்மணிமண்டபம் வடிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதைத்தொடர்ந்து, தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ.47,02,500க்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: