×

சென்னை ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மழை குறைந்ததால் புழல்,செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதையடுத்து, பலத்த மழை பெய்ததால் புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 2ம் தேதி முதல் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளதால், புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதன்காரணமாக, தற்போது ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியில் இருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ஒரு மதகின் வழியாக 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, ஏரிக்கு வினாடிக்கு 166 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மொத்தம் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2530 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிலவரம், ஏரிகளுக்கான நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றுவது அதிகரிப்பதும், குறைப்பதும் பற்றி முடிவு செய்யப்படும். மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் 800 கன அடியில் இருந்து 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.

Tags : Chennai ,Water Resources Department , Reduction of release of excess water in Chennai lakes: Information from Water Resources Department officials
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...