பழங்குடி மக்களை வஞ்சிக்கின்றனர் வனத்தையும் விற்கின்றனர்: குஜராத்தில் பாஜ மீது ராகுல் தாக்கு

மகுவா: பழங்குடியினரின் நிலங்களை பறித்து அவற்றை தொழிலதிபர்களுக்கு பாஜ கட்சி வழங்கி உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு  வருகிறார். இந்த ஒற்றுமை பயணம் நேற்று முன்தினம்  மத்திய பிரதேச எல்லை  வந்தடைந்தது. அதன் பின் இரவு அங்கு ஓய்வு எடுத்த அவர் நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தி கொண்டு, குஜராத்தில் நேற்று ஒருநாள் பிரசாரம் செய்தார். சமீபத்தில் இமாச்சலில் நடந்த தேர்தலில் பிரசாரம் செய்யாத ராகுல், பாஜவின் கோட்டையான குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

சூரத் மாவட்டம் மகுவாவில் அவர் கூறியதாவது: ஒற்றுமை நடைபயணத்தின் போது, பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்களை சந்தித்த போது அவர்களுடைய வேதனைகளை உணர்ந்தேன். பாஜவின் செயல்பாடுகள் தான் இதற்கு காரணம். இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் பழங்குடியினர்தான். ஆனால், அவர்களை பாஜ வனவாசிகள் என அழைக்கிறது. நீங்கள்  நகரங்களில் வாழ்வது அவர்களுக்கு விருப்பம் இல்லை. உங்களுடைய குழந்தைகள் இன்ஜினியர்கள், டாக்டர்கள், விமான பைலட்டுகள் ஆவதற்கோ அல்லது ஆங்கிலம் பேசவோ பாஜவுக்கு விருப்பம் இல்லை.

பழங்குடியினர் வன பகுதிகளில்தான் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அது மட்டுமில்லாமல் வனத்தில் உள்ள நிலங்களையும் பிடுங்கி கொள்கின்றனர். இது தொடர்ந்தால் 10 ஆண்டுகளில் வன பகுதிகள் அனைத்தும் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களின் கைகளுக்கு சென்று விடும். நீங்கள் வசிப்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும். கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காது. காங்கிரஸ் கூட்டணி அரசு ஒன்றியத்தில் பதவியில் இருந்த போது கொண்டு வந்த வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம் போன்றவற்றை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை

ராஜ்கோட்டில் ராகுல் பேசுகையில், ‘‘குஜராத்தின் மோர்பி பகுதியில் தொங்கும் பாலம் அறுந்து 150 பேர் வரை பலியாகினர். அந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் அந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் பாஜவுடன் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை’’ என்றார்.

Related Stories: