×

 ஒன்று முதல் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. அந்த குழந்தைகளுக்கு இனிமேல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் இரண்டாவது ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார குறியீடுகளை கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம். என்னை பொறுத்தவரையில் இந்த நோக்கத்தில் இம்மியளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது.

இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி. கிராமப்புற பிரச்னைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளை செய்து தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த மே 18ம் தேதி இக்குழுவினுடைய முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று நடப்பது இரண்டாவது ஆலோசனை கூட்டம். இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

1. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதியினுடைய மேம்பாட்டு திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூ.5 கோடி நிதி மூலமாக பல்வேறு பணிகள் ஊரக பகுதியில் நிறைவேற்றப்படுகிறது. 2019-20ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3,471 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 3,043 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 428 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. அதேபோல், 2021-22ம் ஆண்டினை பொறுத்தவரைக்கும், 1,015 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 570 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  

2. தேசிய நல்வாழ்வுக் குழுமம்: பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தினுடைய நோக்கம். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் - மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லா திட்டம், நடமாடும் மருத்துவ குழு, நடமாடும் மருத்துவமனை, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி (ஊட்டச்சத்து கணக்கெடுப்பு), பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர கால மேலாண்மை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மேலாண்மை பிரிவு திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

3. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்: மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 லட்சத்து, 774 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இக்குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ எனும் திட்டம் கடந்த 21.5.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவ குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

4. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்: தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோக திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், ‘பட்டினியின்மை’ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுடன் கூடிய மாநில உணவு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

5. பிரதமரின் முன்னோடி கிராம திட்டம்: கிராம மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களை சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அனைவரும் விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டமுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதுதான். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்தில் உதவி செய்பவை. எந்த திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம். உங்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உருவாக்கிடும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்பிக்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.நவாஸ் கனி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன், தலைமை செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தமிழகத்தில், ‘பட்டினியின்மை’ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது.
* அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி என்பதே இந்த அரசின் நோக்கம்.
* மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாக கொண்டு வளர்ச்சியை தீர்மானிக்க வேண்டும்.

Tags : Anganwadi ,Chief Minister ,M.K.Stal , Week 3 eggs in Anganwadi for children between one and two years of age: Chief Minister M.K.Stal's announcement
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்