×

குமரி கடலோர கிராமங்களில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம்: கேக் வெட்டி கடலுக்கு மலர்தூவினர்

நாகர்கோவில்: உலக மீனவர் தினவிழா குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இன்று கேக் வெட்டியும், கடலுக்கு மலர்கள் தூவியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சூழலியல் மாற்றங்கள், அரசு ெகாண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்போது குரல் கொடுக்கும் வகையியிலும், மீனவ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுடெல்லியில் 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர். அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டமாக உலக மீனவர் தினம் கொண்டாட்டங்கள் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 42 மீனவ கிராமங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், வள்ளங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. ஆழ்கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்யும் திறமை பெற்றவர்களாக குமரி மாவட்ட மீனவர்கள் விளங்குகின்றனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலும், கர்நாடகா, குஜராத் போன்ற நாடுகளிலும், வெளிநாடுகளிலும் சென்று தங்கியிருந்து குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மீனவர்களின் குறைகள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினத்தையொட்டி பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் மீனவர் அமைப்புகளால் நடத்தப்படுகிறது. கிராமங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு நடத்துகின்ற உலக மீனவர் நாள் வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெறுகிறது.

கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், விஜய்வசந்த் எம்.பி நாகர்கோவில் மாநகர மேயர் வக்கீல் மகேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, கலெக்டர் அரவிந்த், எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் மற்றும் எல்எல்ஏக்கள் கலந்துகொள்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகள் ெதாடர்பாக பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.

உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் குமரி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களின் விசைப்படகுகள், கட்டுமரங்கள் போன்றவை சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் துறைமுக பகுதிகளில் மற்றும் கடலோர கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க ஆழ்கடல் சென்றுள்ள மீனவர்களும், அண்டை மாநிலங்களில் மீன்பிடி தொழில் செய்வோரும் கரை திரும்பியுள்ளனர்.
பள்ளம் மீனவ கிராமத்தில் அங்குள்ள தேவாலயத்தில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மீன்பி கலமான படகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து கடல் அன்னைக்கு மலர் தூவினர். படகு மந்திரித்தல் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் பங்குதந்தை சூசை ஆன்றனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : World Fisherman's Day Friday ,Kumari Coastal Villages , World Fisherman's Day Friday Celebration in Kumari Coastal Villages: Cut a cake and throw flowers into the sea
× RELATED குமரி கடற்கரை கிராமங்களில் இன்று உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம்