பனிப்பொழிவு நீடிப்பு, நெல்லையில் வடகிழக்கு பருவமழை `டிமிக்கி’தென்காசியிலும் ஏமாற்றம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 4வது நாளாக மழை பதிவு குறைந்தது. பனிப்பொழிவு நீடிப்பதால் குளத்துப்பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் கடந்த 4 தினங்களாக மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்காத நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அதிகாலை பனிப்பொழிவு தலைதூக்கி வருகிறது. இன்றும் நெல்லை மாவட்டத்தில் பரவலாக பனிப்பொழிவு நீடித்தது. இதனால் அக்டோபர், நவம்பரில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.

நவம்பரில் 3 வாரம் கடந்த நிலையில் மழையளவு உயராததால் அணைகளில் நீர் இருப்பும் வேகமாக உயராத நிலை உள்ளது. மேலும் குளங்களுக்கும் நீர் பெருகாததால் குளத்து பாசன விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க தயங்குகின்றனர். நெல்ைல மாநகர பகுதியில் பல வயல்களில் நடவுப்பணி தீவிரமடையவில்லை.அக்டோபர், நவம்பரில் நிரம்பி வழியும் பாபநாசம் அணை இன்றைய நிலவரப்படி 100 அடியை கூட எட்டிவில்லை. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர் மட்டம் 98.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 998.73 கனஅடி நீர் வருகிறது.

அணையில் இருந்து 704.85 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 11.42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 79.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 192 கனஅடிநீர் வருகிறது. 35 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு 14 அடியாகவும், நம்பியாறு 12.49 அடியாகவும், கொடுமுடியாறு அணை 44.25 அடியாகவும் நீர் மட்டம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் எந்தப்பகுதியிலும் மழை பதிவு இல்லை. இதுபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று வறண்ட வானிலை நிலவியது. இந்த மாவட்டத்தில் அடவிநயினார் அணை பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 85.50 அடியாக உள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் எங்கும் மழை இல்லை.

Related Stories: