×

இன்று கார்த்திகை முதல் சோமவாரம்: குற்றால அருவியில் பெண்கள் புனித நீராடி வழிபாடு

தென்காசி: குற்றாலத்தில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அருவியில் புனித நீராடி அரசமரத்துடன் கூடிய விநாயகர் சிறப்பு வழிபாடு செய்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கணவர் நீண்ட ஆயுளோட வாழ வேண்டியும்,  கன்னிப் பெண்கள் திருமணம் தடை இல்லாமல் நடைபெற வேண்டியும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி குற்றால நாதர் சுவாமி திருக்கோவில் அருகில் உள்ள அரசமரத்துடன் கூடிய செண்பக விநாயகர் கோவிலில் 11 முறை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு பழம், மஞ்சள் பொடி வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகளை செய்தனர். கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதல் தொடர்ந்து 9 மணி வரை பெண்களே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளில் குளிக்க அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்கு பிறகு குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஆண்களும், பெண்கள் பகுதியில் பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் ஏராளமான பெண் போலீசார்கள் செய்திருந்தனர்.

Tags : Karthika ,Koortala , Today is Karthika first Monday: Women take a holy dip in Koortala waterfall
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்