×

வருவாய் பெருக்க போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை; அரசு பஸ்களின் பக்கவாட்டில் விளம்பரம் செய்ய அனுமதி

நெல்லை: அரசு போக்குவரத்துகழகங்களில் வருவாயை பெருக்க பஸ்சின் பக்கவாட்டு பகுதிகளிலும் முழு விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் கடந்த ஆட்சியில் வருவாயை பெருக்க வழியில்லாமல் திணறியது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் வழங்குவது சவாலான செயலாக மாறியது. இந்த நிலை தொடர்ந்ததால் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் விரைவு போக்குவரத்துக்கழகங்களின் வருவாயை பெருக்க போக்குவரத்துக்கழகம் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விழாக்காலங்களில் தேவையான வழித்தடங்களில் அதிக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தொலைதூர பயணங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் அரசு போக்குவரத்து கழகங்களும் சிறப்பு பஸ்களை இயக்குகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட அளவு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதன் தொடர்ச்சியாக அரசு பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள இடங்களில் விளம்பரம் செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ்கள் செல்லும் நகரங்கள் மற்றும் அதன் பயண கிலோ மீட்டர் தூரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு சதுர அடி அளவு அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான கட்டணம் என நிர்ணயம் செய்துள்ளனர்.
 
டெணஙடர் மூலம் பஸ்களில் விளம்பரம் செய்ய ஏஜென்டுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொலைதூர பஸ்களில் குறைந்தது 11 மாதம் என்பது போன்ற விளம்பர நாட்கள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் முதற்கட்டமாக ஏசி பஸ்களில் முழு அளவிலான விளம்பரங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு செய்யத் தொடங்கியுள்ளன. ஏசி பஸ்களில் கண்ணாடி பகுதியிலும் விளம்பரம் இருந்தாலும் உள்ளே இருந்து பார்ப்பவர்களுக்கு வெளிப்பகுதி தெரியும் வகையில் டாட் விளம்பர ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உள்ளே இருப்பவர்களுக்கு வெளியில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பர ஸ்டிக்கர் பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்த புதிய நடை முறை நெல்லையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக்கழக  ஏசி பஸ்களிலும் நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். விளம்பர வரவேற்பை பொருத்து அடுத்தக்கட்டமாக நகர பஸ்களிலும் இந்த விளம்பர வருவாய் யுக்தி கடைபிடிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

Tags : Transport Corporation , Transport Corporation's New Action to Increase Revenue; Advertising allowed on side of government buses
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்