பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே மாதிரி ரவுண்டானா அமைப்பு; மண் மூட்டைகளை அடுக்கி ஒத்திகை பார்த்தனர்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன நெருக்கடியை குறைக்கும் வகையில் கோட்டார் சாலை உள்பட பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. வருகிற காலங்களில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் இருவழி சாலையாக மாற்றவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் காலை, மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் அருகே ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரவுண்டானா அமைக்கப்பட்டபிறகு போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பகுதியில் ரவுண்டானாக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சிஎஸ்ஐ கற்கோவில் முன்பு ரவுண்டானா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பகுதியில் இருந்த பூங்கா அகற்றப்பட்டுள்ளது.

ரவுண்டானா அமையும் இடத்தில் ஒத்திகை பார்க்கும் வகையில் பேரிகார்டு மற்றும் மண் மூட்டைகளை கொண்டு மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்ட பிறகு வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறதா? என்பதை பார்த்து, அதற்கு ஏற்ற வகையில் ரவுண்டானா அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அதிகாரி கூறியதாவது: மாநகர பகுதியில் நெருக்கடி ஏற்படும் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு ரவுண்டானா ரூ.9 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கும் வகையில் அலங்கார நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது. தற்போது ரவுண்டானா அமையும் இடத்தில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. என்றார்.

Related Stories: