×

கொச்சியில் இருந்து வீட்டுக்கு காரில் சென்றபோது கேரள தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமார். சென்னையை சேர்ந்தவர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்றிரவு 11 மணியளவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து, தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அப்போது சேராநல்லூர் என்ற பகுதியில் இருந்து ஒருவர், தலைமை நீதிபதியின் காரை பின் தொடர்ந்து வந்தார். கோஸ்ரி பாலம் அருகே திடீரென காரை திடீரென மறித்தார். உடனே டிரைவர், காரை நிறுத்தினார்.

பின்னர் ஆவேசத்துடன் அந்த வாலிபர், தலைமை நீதிபதியை திட்டினார். உடனே காரில் இருந்த நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி, அந்த நபரை அப்புறப்படுத்த முயன்றார். அவரை அந்த நபர் தாக்க முயன்றார். பின்னர் தலைமை நீதிபதியின் வாகனத்தின் பின்னால் வந்த போலீசார், அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். குடிபோதையில் இருந்த அவரது பெயர் டிஜோ, இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையை சேர்ந்தவர், கொச்சியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் கொச்சி முளவுகாடு போலீசார், இபிகோ 308 பிரிவின் கீழ் லாரி டிரைவர் டிஜோ மீது வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபர் எதற்காக நீதிபதியை தாக்க முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chief Justice ,Kerala ,Kochi , Attempted attack on Chief Justice of Kerala while driving home from Kochi: intensive interrogation of lorry driver
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...